×

ஐபிஎல்லில் இருந்து விலகிய பென் டக்கெட்டுக்கு மாற்றாக ரெஹான் அகமத்தை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பென் டக்கெட்டுக்கு மாற்றாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ரெஹான் அகமத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணி அறிவித்துள்ளது. ஆஷஸ் தொடரில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்க பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஐபில் தொடரில் இருந்து பென் டக்கெட் விலகியுள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக, இங்கிலாந்து அதிரடி பேட்டர் பென் டக்கட்டிற்குப் பதிலாக அந்நாட்டு இளம் சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமதுவை டெல்லி கேபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 21 வயதான ரெஹான் 75 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் படேல், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் மற்றும் நிதிஷ் ராணா என ஏற்கனவே ஒரு வலுவான சுழற்பந்துப் படையைக் கொண்டுள்ள டெல்லி அணி, மீண்டும் ஒரு லெக்-ஸ்பின்னரைத் தேர்வு செய்துள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெஹான் அகமது பேட்டிங்கிலும் ஓரளவிற்குப் பங்களிக்கக்கூடியவர் என்றாலும், அவர் ஒரு பிரத்யேக பந்துவீச்சாளராகவே அறியப்படுகிறார்.

சர்வதேச அளவில் இதுவரை 5 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரெஹான், மொத்தம் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 97 ஆட்டங்களில் பங்கேற்று 85 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவர், பேட்டிங்கில் 125.70 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 1071 ரன்களையும் சேர்த்துள்ளார்.

முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணியால் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் டக்கட், தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென விலகினார். இங்கிலாந்தின் கோடைகால சர்வதேசப் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவும், உடல் மற்றும் மன ரீதியாகத் தயாராக இருக்கவும் இந்த கடினமான முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார். தனது இந்த திடீர் விலகலுக்காக அணி நிர்வாகத்திடமும் ரசிகர்களிடமும் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இருப்பினும், தகுந்த மருத்துவக் காரணங்கள் ஏதுமின்றி ஏலத்திற்குப் பிறகு விலகும் வீரர்கள் மீது ஐபிஎல் கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறது. கடந்த ஆண்டு ஹாரி புரூக் விலகியபோதும் இதே போன்ற சலசலப்புகள் ஏற்பட்டன. தற்போது டக்கட்டின் இந்த முடிவால் அவருக்கு எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Tags : Delhi Capitals ,Rehan Ahmad ,Ben Duckett ,IPL ,Delhi ,England ,Rehan Ahama ,Ben ,Ashes ,
× RELATED இந்தாண்டுடன் ஓய்வு பெறுவதாக சூசி பேட்ஸ் அறிவிப்பு