நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், பிப். 24: நாகர்கோவிலில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் பணியாற்றிய கிராம சுகாதார செவிலியர் பணி அழுத்தம் மற்றும்  மாவட்ட அதிகாரிகள் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதை கண்டித்தும்,   இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீடாக ₹50  லட்சம் மற்றும் அவரது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம  சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில்  சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு,  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜாஸ்மின் சுஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மால்சிபாய், இணைச்செயலாளர் மேரி சிந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயலாளர் நிர்மலா மேரி வரவேற்றார். மாநில தலைவர் நிர்மலா போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் ரெமா கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பயோமெட்ரிக் முறையை கைவிட வேண்டும்.  துணை சுகாதார நிலைய கட்டிடங்களுக்கு வாடகை தொகை, மின் கட்டணம்  பராமரிப்புச்செலவு, பயணப்படி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். மகப்பேறு நிதி  உதவி திட்டம் எளிமையாக்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம சுகாதார செவிலியர்கள்  கலந்து கொண்டனர்.

Related Stories: