அவிநாசி, ஏப்.23: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வருதலும், இரவு திருமுருகன்பூண்டியில் இருந்து திருமுருகநாதர் வருகையும் நடைபெற்றது.
நேற்று இரவு சூரிய சந்திர மண்டல காட்சிகள் நடைபெற்றது. இதில் ஆனந்தவள்ளித் தாயாருடன் சந்திரசேகரர் அலங்காரத்துடன் 4 தேர் வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முன்னதாக விஸ்வகர்ம மண்டபத்தில் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
