அவிநாசி, ஏப். 20: கோவை அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொகளூர் ஊராட்சிக்குள் அமைந்துள்ள கூலேகவுண்டன்புதூர் மற்றும் கோபி ராசிபுரம் போன்ற கிராமங்களில் உள்ள குட்டைகளில், அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் அமைக்கப்பட்டும், அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் விட்டதால் கடந்த பாராளுமன்ற தேர்தல் போன்றவற்றை அவ்வூர் மக்கள் புறக்கணித்துள்ளார்கள்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய இணையமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல்.முருகன், சம்பந்தப்பட்ட இரண்டு கிராமத்து மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது முக்கியமான குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் குறைபாடுகள் அனைத்தும், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் உறுதியாக சரிசெய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பதுடன், அது தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கையும் முடித்து தருவதாக கூறியுள்ளார். எல்.முருகனின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட இரண்டு ஊர் மக்களும், நிச்சயமாக இந்தத் தேர்தலில் வாக்களிப்போம் என்றும், தங்களது வாக்குகளை எல்.முருகனுக்கே அளிப்போம் எனவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
