திருப்பூர்,ஏப்.22: திருப்பூரில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தாரணி (21). இவர் திருப்பூர் மாநகரில் உள்ள அரசு கல்லூரியில் ஆடை வடிவமைப்பு துறையில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தாரணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சன்மதி (16). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவிற்காக காத்திருந்தார். இந்த நிலையில் சன்மதியின் பெற்றோருக்கும் அவர்களது உறவினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சன்மதி உறவினர்களிடம் பேசியதாக தெரிகிறது. அவர்களிடம் பேசக்கூடாது என பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சன்மதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
