ஒரப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் தாமதத்தால் கர்ப்பிணிகள் அவதி

கிருஷ்ணகிரி, பிப்.24: கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரப்பம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு ஒரப்பம், செட்டிப்பள்ளி, சின்னஒரப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும், இந்த பகுதியில் உள்ள கர்ப்பிணிகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம். நேற்று சுமார் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், காலை 8 மணி முதலே மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தனர். ஆனால், 10 மணியாகியும் மருத்துவர் வராததால் கர்ப்பிணிகள் கடும் அவதியடைந்தனர். இந்த மருத்துவமனையில் போதிய அளவு செவிலியர்களும் இல்லை. ஒரே ஒரு ஆண் மருத்துவர் மட்டுமே இங்கு பணியாற்றி வருகிறார். கர்ப்பிணிகள் தங்கள் உடல் உபாதைகளை அவரிடம் கூற தயக்கம் காட்டி வருவதால், கூடுதலாக ஒரு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்பது கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும், நேற்று மருந்தாளுநரும் விடுப்பு எடுத்துள்ளதால், அலுவலக உதவியாளர் தான் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கியுள்ளார். மேலும், ரத்தம், சிறுநீர், சளி போன்ற பரிசோதனை செய்ய ஆய்வகம் இருந்தும், ஊழியர்கள் இல்லாததால் கிருஷ்ணகிரி, பர்கூர் போன்ற நகரங்களுக்கு கர்ப்பிணிகள் சென்று வரும் அவல நிலை உள்ளது. இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி, போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>