பஹல்காம் தாக்குதல் நினைவு நாள் – எந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் இந்தியா அடிபணியாது: பிரதமர் மோடி

டெல்லி: தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் 22, 2025 பாகிஸ்தான் ஆதரவுடன் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

எந்த வடிவில் பயங்கரவாதம் இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறார். X தளத்தில் பதிவிட்டிருக்கும் போஸ்ட் ஒன்றில், பிரதமர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, நாடு அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க ஒன்றுபட்டு நிற்பதாகவும், “பயங்கரவாதிகளின் கொடூரமான திட்டங்களை” முறியடிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.

பிரதமர் மோடி தனது சமீபத்திய எக்ஸ் பதிவில், “கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களை நினைவுகூர்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். இந்த இழப்பைத் தாங்கிக்கொண்டு மீண்டுவர முயலும் துயருற்ற குடும்பங்களுடனும் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன. ஒரு தேசமாக, துயரத்திலும் உறுதியிலும் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். எந்த வடிவத்திலான தீவிரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் பணியாது. பயங்கரவாதிகளின் இழிவான சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது,” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனிடையே ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில், “இந்திய மக்களுக்குத் தீங்கு விளைவிக்க ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இந்தியா வலிமையுடனும் தெளிவுடனும் பதிலடி கொடுக்கும். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் தங்கள் உயிரை இழந்த அப்பாவி மக்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்தியா பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைச் சகித்து வந்துள்ளது, ஆனால் தற்போது நமது பதிலட உறுதியானதாகவும், தீர்க்கமானதாகவும், அசைக்க முடியாததாகவும் உள்ளது. நமது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கவோ அல்லது நமது ஒற்றுமையைக் குலைக்கவோ செய்யப்படும் எந்தவொரு முயற்சிக்கும் வலிமையுடனும் தெளிவுடனும் பதிலடி கொடுக்கப்படும் என்பதை உறுதியான நடவடிக்கை மூலம் நிரூபித்துள்ளோம்” என்று பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்காக திருப்பி தரப்பட்ட பதிலடியான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் நினைவுகூர்ந்தது. மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, ​​அதற்கான பதிலடி உறுதியானதாக இருக்கும். நீதி நிலைநாட்டப்படும். இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது என்று இந்திய ராணுவத்தின் பொதுத் தகவல் கூடுதல் தலைமை இயக்குநரகம் (ADG PI) நேற்று தனது சோஷியல் மீடியா பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தது. அதோடு சில எல்லைகளை ஒருபோதும் மீறக்கூடாது. இந்தியா எதையும் மறப்பதில்லை என்ற வாசகம் அடங்கிய செய்தி அப்பதிவில் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: