ஐதராபாத்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 31வது போட்டியில் நேற்று ஐதராபாத் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணி ஓப்பனர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களம் கண்டனர். ஒரு புறம் டிராவிஸ் ஹெட் நிதானத்துடன் ஆட, மறுபுறம் அபிஷேக் சர்மா டெல்லி அணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அதிரடியாக ரன் குவித்தார்.
இதன் பலனாக 25 பந்தில் அவர் அரை சதத்தை கடந்தார். ஸ்கோர் 97 ரன்னாக உயர்ந்தபோது டிராவிஸ் 37 ரன்னில் (26 பந்து, 2 போர், 2 சிக்ஸ்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் இசான் கிசனுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா தனது ஆட்டத்தின் வேகத்தை குறைக்காமல் அதே வேகத்தில் தொடர்ந்தார். அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 47 பந்தில் ஐபிஎல்லில் தனது இரண்டாவது சதத்தை எட்டி அசத்தினார். மறுபுறம் நன்றாக ஆடி வந்த இசான் கிசன் 25 ரன்னில் (13 பந்து, 2 போர், 1 சிக்ஸ்) இருந்த ேபாது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த கிளாசனும், அபிஷேக் சர்மாவும் ஜோடி சேர்ந்து ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.
இதன் பலனாக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களை குவித்தது. அபிஷேக் சர்மா 135 ரன் (68 பந்து, 10 போர், 10 சிக்ஸ்), கிளாசன் 37 ரன்னுடன் (13 பந்து, 3 போர், 3 சிக்ஸ்) களத்தில் இருந்தனர். அடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.அதன் பிறகு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.
* ஆரஞ்ச் தொப்பி தட்டி தூக்கினார் அபிஷேக் சர்மா: கிளாசென்னுக்கு 2ம் இடம்
ஐபிஎல் கிரிக்கெட் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் விவரங்கள், தினமும் மாற்றம் பெற்று வருகிறது. அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் ஒரு சதம், 2 அரை சதத்துடன் 323 ரன் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். ஹென்ரிச் கிளாசென் 7 போட்டிகளில் 3 அரைசதத்துடன் 320 ரன் குவித்து 2ம் இடத்தில் உள்ளார். 3ம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன்கில், 5 போட்டிகளில் 3 அரை சதத்துடன் 265 ரன்னுடன் உள்ளார்.
4ம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோஹ்லி 6 போட்டிகளில் 2 அரை சதத்துடன் 247 ரன்களுடன் உள்ளார். 5ம் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்சி 6 போட்டிகளில் 2 அரை சதத்துடன் 246 ரன்னுடன் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் அன்சூல் கம்போஜ் 13 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் ஊதா நிற தொப்பியை கைப்பற்றியிருக்கிறார். 2ம் இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா 12 விக்கெட்டுகளுடனும், 3ம் இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் பிரின்ஸ் யாதவ் 11 விக்கெட்டுகளுடனும் உள்ளனர்.
