ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் எட்டு வாரங்களே உள்ள நிலையில், வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய வீராங்கனைகள் கணிசமான இடங்களை முன்னேறி அசத்தியுள்ளனர். குறிப்பாக, தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம், இந்த தரவரிசை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் தனது 5-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், சக வீராங்கனைகளான அனெரி டெர்க்சென் மற்றும் சுனே லூஸ் முறையே 33 மற்றும் 35-வது இடங்களுக்கு முன்னேறி அணிக்கு வலு சேர்த்துள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, அதிரடி பேட்டர் ஷஃபாலி வர்மா இரண்டு இடங்கள் உயர்ந்து 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்தில் நீடித்து முதன்மையாகத் திகழ்கிறார். அதேபோல், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனது சிறப்பான ஆட்டத்தால் 11-வது இடத்திற்கு முன்னேறி முதல் பத்து இடங்களுக்குள் நுழையத் தயாராக உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் நொங்குலுலேகோ மலாபா 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணியும் 4 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
