சில்லி பாயிண்ட்

 

* வில்வித்தை ஜாக்கருக்கு 2 ஆண்டு தடை

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரதமேஷ் ஜாக்கர், ஊக்க மருந்து சோதனைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக, இந்த சோதனைகளுக்கு அவர் டிமிக்கி கொடுத்து வந்ததை, அடுத்து நடந்த ஒரு விசாரணையில், தான் அலட்சியமாக இருந்ததை அவர் ஒப்புக் கொண்டார். அதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு வில் வித்தை போட்டிகளில் அவர் போட்டியிட முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தாண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளிலும், வரும் 2028ல் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பிரதமேஷ் போட்டியிட முடியாது.

* சீரி ஏ கால்பந்து: ஜுவன்டஸ் வெற்றி

டுரின்: இத்தாலியின் டுரின் நகரில் சீரி ஏ கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் ஜுவன்டஸ் – பொலோக்னா அணிகள் மோதின. துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஜுவன்டஸ் அணியின் ஜோனாதன் டேவிட், போட்டியின் 2வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அசத்தினார். போட்டியின் 2ம் பாதியில் 57வது நிமிடத்தில் ஜுவன்டஸ் அணியின் கெப்ரன் துரம் அணியின் 2வது கோல் போட்டு வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். மாறாக, பொலோக்னா அணி வீரர்களால் கடைசி வரை கோல் போட முடியவில்லை. எனவே, 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸ் அபார வெற்றி பெற்றது.

* 95வது கிராண்ட்மாஸ்டர் அரோன்யாக் அசத்தல்

புதுடெல்லி: இந்திய செஸ் உலகின் புது வரவாக, கொல்கத்தாவை சேர்ந்த அரோன்யாக் கோஷ், இந்தியாவின் 95வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார். பாங்காக் செஸ் கிளப் ஓபன், 9 போட்டிகளில், 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த அரோன்யாக் கோஷ், கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான கடைசி தகுதியை பெற்றார். அதையடுத்து, கிராண்ட் மாஸ்டராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2025ல் ஃபிடே உலகக் கோப்பை போட்டிகளில் ஆட தகுதி பெற்ற அரோன்யாக், போலந்தின் மேடியுஸ் பார்டெலை முதல் சுற்றில் வென்றார். அடுத்த போட்டியில் லெவான் ஆரோனியனிடம் வீழ்ந்தார்.

Related Stories: