தொடர் தோல்விக்கு தந்தது விடை வென்றது கேகேஆர்: அரை சதம் விளாசிய ரிங்கு சிங்.

கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் 28வது போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. அதில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ், இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்லாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.

சிறப்பாக ஆடிய இந்த இணை 8.4 ஓவரில் 81 ரன்கள் விளாசியிருந்த நிலையில், 9வது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி பந்தில் வைபவ் சூர்யவன்ஷி (28 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி, 46 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துருவ் ஜுரெல் 5 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 39 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வருண் வீசிய 15வது ஓவரில் கேப்டன் ரியான் பராக் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டொனாவன் பெரேரா 7, ரவீந்திர ஜடேஜா 9, ஷிம்ரான் ஹெட்மயர் 15, ரவி பிஷ்னோய் 0 ரன்னில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

அதனால், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணியின் டிம் செபெர்ட், கேப்டன் அஜிங்கிய ரஹானே களமிறங்கினர். இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த அங்கிரீஷ் ரகுவன்ஷி 10, கேமரூன் கிரீன் 27, ரோமேன் பாவல் 23, ரமண்தீப் சிங் 10 ரன் எடுத்து வீழ்ந்தனர்.

இருப்பினும், 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ரிங்கு சிங் (34 பந்து, 2 சிக்சர், 5 பவுண்டரி, 53 ரன்), அனுகுல் ராய் (16 பந்து, 29 ரன்) பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். அவர்கள், 37 பந்துகளில் 76 ரன் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அதனால், கொல்கத்தா 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகன்.

Related Stories: