4 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில்: 24ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் 104 டிகிரியும், 5 மாவட்டங்களில் 102 டிகிரியும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் தெலங்கானா முதல் குமரிக்கடல் வரையில் தமிழகம் வழியாக வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டு இருப்பதால் 24ம் தேதி வரை கடலோர, உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். அதே நேரத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பநிலை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரை, ஈரோடு, கரூர், வேலூர் மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டை 102 டிகிரி, சேலம், சென்னை 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில் தெலங்கானா முதல் குமரிக் கடல் வரை ராயலசீமா மற்றும் உள் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை வளி மண்டலத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இன்றும் நாளையும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சில இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வேகம் வரையில் வீசும். இதேநிலை 24ம் தேதி வரையில் நீடிக்கும். வெப்பநிலையை பொருத்தவரையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சில இடங்களில் உயரும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் 2-4 டிகிரி இயல்பைவிடவும் அதிகமாக இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டி இருக்கும். அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் இருக்கும் நிலையில் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Related Stories: