சேந்தமங்கலம், ஏப்.20: வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினமான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். சென்னை, பாண்டிச்சேரி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐடி, நிதி நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் டூவீலரில் வந்திருந்தனர். குறைவாக தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
அங்குள்ள பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் இயற்கை அழகை சுற்றி பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குடும்பத்துடன் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலை வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் அன்னாசி, பலா, மலை வாழை, கொய்யா, கமலா ஆரஞ்சு, தேன், மிளகு கொல்லிமலை விளைபொருட்களை வாங்கி சென்றனர்.
