வேலூர்: வேலூர், குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் அஇபுதமமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அஇபுதமமுக தலைவர் சசிகலா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘துரோகி கட்சி ரூ.10 ஆயிரமும், பிரிட்ஜ் தருவதாக கூறியிருக்கிறது. இதை எப்படி நிறைவேற்றுவார்கள். கடன் வாங்கித்தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இப்போதே தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.2.50 லட்சம் கடன் உள்ளது. இங்கு பாட்டாளி சொந்தங்கள் வந்துள்ளீர்கள். ராமதாஸூம் என்னோடு வந்து பேசுவதாகத்தான் இருந்தது.
ஆனால் அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார். அவர் உடல் நலன் குன்றி மருத்துவமனையில் இருப்பதற்கு அவரது மகன் அன்புமணிதான் காரணம். அவருக்கு பின்னால் கட்சி இவரிடம்தான் வந்திருக்க போகிறது. அதற்குள் அவசரம். பதவி வெறி, தந்தைக்கே வினையாக மாறிபோனார். ஆகவே, பாட்டாளி சொந்தங்களே எங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்’ என்றார்.
ஆம்பூரில் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவராக உக்காந்து கிட்டு எடப்பாடி என்ன பண்ணாருன்னே தெரியல. அவர ஜெயிக்க வெச்ச தொகுதி மக்களுக்கே எதுவும் செய்யல. இந்த மாதிரி ஆளுங்கள சட்டசபைக்கே போக விடக்கூடாது. மக்கள் பிரச்னையை பேசாம, வெளிநடப்பு பண்ணிகிட்டு இருந்தா மக்கள் பிரச்னை தீர்ந்து விடுமா? என்றார்.
