திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்: மீண்டும் பிரச்னையை தூண்டும் ராஜ்நாத்சிங்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல், வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து இரவு தங்கினார்.

நேற்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி பாஜ வேட்பாளரை ஆதரித்து புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து சிந்தாமணி பேருந்து நிலையம் வரை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரோடு ஷோ நடத்தினார். அப்பகுதியில் அவர் பேசியதாவது:  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.

என்டிஏ என்பதில் ‘என்’ என்ற எழுத்து நியாயம், ‘டி’ என்ற எழுத்து டெவலப்மென்ட், ‘ஏ’ என்பது அமைதியை குறிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், வளர்ச்சியை விரும்புகின்றனர். நாளை நமதே. இவ்வாறு அவர் பேசினார். திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தடை விதித்து உள்ள நிலையில், அமைதியாக உள்ள தமிழகத்தில் மீண்டும் பிரச்னை கிளப்பும் வகையில் ராஜ்நாத் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாரத்தை முடித்துவிட்டு, வாசுதேவநல்லூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு ராஜ்நாத் சிங் சென்றார். அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் முருகன் கோயில் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை திருக்கோயில் இணை ஆணையர் ராமு சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு சுவாமி தரிசனம் செய்திட வந்த அமைச்சர் ராஜ்நாத் சிங் கோயிலில் மூலவர், பஞ்சலிங்கம், சண்முகர், வள்ளி, தெய்வானை, குரு பகவான், சூரசம்ஹாரமூர்த்தி மற்றும் பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

Related Stories: