கோபி நம்பியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரசார கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு சேகரித்து பேசியதாவது: எம்.ஜி.ஆரோடு எனது பயணத்தைத் தொடங்கினேன். ஜெயலலிதாவுடன் பயணத்தைத் தொடர்ந்தேன். கடந்த 8 ஆண்டு காலம் நான் பெரும் துன்பத்திலும் துயரத்திலும் இருந்தேன். எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்து, வீதியில் நடக்க முடியுமா? என்று கேட்கிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் ஆகாயம் ஏறுகிறானாம்.
சேலத்தில் இருந்து வந்து இங்கே எனக்குச் சவால் விடுகிறார். எடப்பாடி பழனிசாமி என்றைக்கும் ஆட்சிக்கு வர முடியாது. மொண்டிக்குதிரை வைத்துக் கொண்டு கிண்டி ரேசுக்கு போகிறாராம். கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்கிறார் எடப்பாடி. அவர் அறிவை பாருங்கள். எடப்பாடி பழனிசாமியே ஒரு வருடம் நடக்க முடியாமல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர். கட்சிக்காரர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று என்னைப் பார்த்துச் சொல்கிறார்.
ஆனால், 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பில் இல்லாதவர்களுக்கும் சீட்டு கொடுத்துவிட்டு, இப்போது கட்சிக்காரர்களை மதிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியவன், ஆனால் என்னிடம் பணம் (பெட்டி) இல்லை. கோபிக்கு வந்து கொக்கரித்து சென்றிருக்கிறார். மக்கள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்று பாருங்கள்.
நன்றியைப் பற்றிப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சசிகலாவே கேட்கிறார். 1981ல் எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது யார்?. 1989ல் அவரை அடையாளம் காட்டியது யார்? இதையெல்லாம் மறந்துவிட்டு, 50,000 கோடி சம்பாதித்துவிட்டு அவர் செய்கின்ற அலப்பறை தாங்க முடியவில்லை. 2001ல் பதவியிலிருந்து நீக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, நான் ஜெயலலிதாவிடம் கெஞ்சிதான் மீண்டும் பதவி வாங்கிக் கொடுத்தேன். ஒரே மேடையில் பேசலாம் உங்களுக்குத் துணிவு உள்ளதா? சவால் விடுகிறேன்.
நான் அமைச்சராக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி வெறும் எம்எல்ஏ தான். 1989ல் ஜெயலலிதாவுடன் நான் பயணம் மேற்கொண்டதைச் சொல்லக்கூடாது. ஏனென்றால் அவரைப் போல தரம் கெட்டவன் நான் அல்ல. சாக்கடைக்கு அருகில் இருந்து கல்லை வீச நான் தயாராக இல்லை. குப்பையைக் கிளறித் துர்நாற்றம் வரவைக்க நான் விரும்பவில்லை. செங்கோட்டையனை தோற்கடித்து வெற்றி விழா கொண்டாடுகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் அது நடக்குமா?. இவ்வாறு பேசினார்.
