பாங்குரா: மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பெண்கள் அதிகாரம் பெறுவதிலோ அல்லது அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதிலோ திரிணாமுல் காங்கிரசுக்கு விருப்பமில்லை. மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண்கள் அதிகளவில் எம்பியாகவும், எம்எல்ஏ ஆகவும் ஆவதை அவர்கள் விரும்பவில்லை.
ஏனெனில், இங்கு நடக்கும் மெகா காட்டுதர்பார் ஆட்சியை பெண்கள் எதிர்க்கின்றனர். அதனால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரசுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ் தடுத்து சதி செய்துள்ளது. இதற்காக இந்த தேர்தலில் மேற்கு வங்க பெண்கள் திரிணாமுல் காங்கிரசை தண்டிப்பார்கள். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தீவிரமாக முன்னெடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அது. இவ்வாறு செய்வதன் மூலம் இந்திய அரசிலயமைப்பின் அடிப்படை உணர்வை சிதைக்கிறது.
ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மம்தா அரசு மேற்கு வங்கத்தின் கலாச்சாரத்தையே மாற்றுகிறது. பழங்குடியினருக்கு எதிரான அரசு மம்தா அரசு. ஊடுருவல்காரர்களுக்கான அரசை அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. இந்த தேர்தல் மேற்கு வங்கத்தின் மரபு, அடையாளத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இதில் ஒவ்வொரு சமூகத்தினரும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
