சுறுசுறுப்பு வேண்டுமா, சோம்பேறி அட்டைக்கத்தி வேண்டுமா? உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

 

சென்னை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பெரம்பூர் தொகுதியில் ஒவ்வொரு வீட்டையும், அவர்களின் பெயர்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பவர் தான் ஆர்.டி.சேகர். ஆனால், பெரம்பூருக்கும், பெரம்பலுாருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இங்கு போட்டியிட்டு உங்களை ஏமாற்றலாம் என எண்ணி கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

அவருக்கும், பெரம்பூருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஆனால், ஆர்.டி.சேகர் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் உங்களை பார்ப்பவர் கிடையாது. உங்களோடு வாழ கூடியவர். இந்த மண்ணின் மைந்தன். குடும்பத்தில் ஒருவர் தான் ஆர்.டி.சேகர். வேறு ஒரு கும்பல் வந்து உங்களை ஏமாற்ற பார்க்கின்றனர். ஜாக்கிரதையாக இருங்கள்.

பெரம்பூர் மக்களிடம் இருந்து ஆர்.டி.சேகரை பிரித்து பார்க்க முடியாது. உங்களது சுக, துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உங்களுடன் ஒருவராக இருப்பார். 40 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர் ஆவார். கொரோனா, மழை வெள்ள காலத்தில் உயிரை பணயம் வைத்து பெரம்பூர் மக்களுக்கு செய்துள்ளார்.

அவரது வீட்டிற்கு நேராக சென்று உங்களது கோரிக்கையை கொடுக்கலாம். ஒரு போன் செய்தால் போதும். அவர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் தேவைகளை சரிசெய்து கொடுப்பார். அதே மாதிரி மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஏமாந்து விடாதீர்கள். ஆர்.டி.சேகர் பங்களாவில் இருக்கும் பண்ணையார் கிடையாது; உங்கள் மண்ணின் மைந்தன். உங்களது பக்கத்து வீட்டில் இருக்க கூடிய உங்களில் ஒருவர்.

பெரம்பூரில் தப்பி தவறி வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுத்து விட்டால், 30 கிலோ மீட்டர் தூரம் சென்று பங்களா வீட்டின் கேட் முன்பு நிற்க வேண்டும். உங்களை உள்ளே கூட விட மாட்டார். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த கொடுமை எல்லாம் சுய மரியாதை உள்ள பெரம்பூர் தொகுதி மக்களுக்கு வேண்டாம். சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் பெயர் போன ஆர்.டி.சேகர் வேண்டுமா; ஓய்வுக்கும், சோம்பறித்தனத்திற்கும் பெயர் போன அட்டைக்கத்திகள் வேண்டுமா? இந்த தேர்தலில் நீங்கள் முடிவு செய்யுங்கள்.

தேர்தல் என்பது திருவிழா. திருவிழா காலங்களில் எல்லாரும் கடை போடுவர். அப்போது, மக்களை கவர, தாஜ்மஹால், ஈகிள் டவர் செட் போடுவர். நமது ஊருக்கு வந்து விட்டதா என மக்கள் அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வர். கூட்டம் கூடுவது உண்மை தான். அது ஒரிஜினல் கிடையாது. வெறும் அட்டை; சின்ன காற்று அடித்தால், அது இருக்காது. தட்டினால் கீழே விழுந்து விடும். அட்டைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள். திருவிழா முடிந்தவுடன் கடைகளை கழற்றி விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவர். அதேபோல் தான், அட்டைக்கத்தி கூட்டமும் தேர்தல் முடிந்ததும் பங்களாவில் போய் ஒளிந்து கொள்வர்.

டி லிமிடெஷன் கொண்டு வந்து தமிழகத்தின் உரிமையை பறிக்க பார்த்தனர். அந்த மசோதாவை இந்தியாவில் எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின் தான். மசோதாவிற்கு தீ வைத்து கொளுத்தி அதில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் மசோதாவை தோற்கடித்து, பா.ஜ.,வை ஓட ஓட விரட்டியடித்தார். உங்கள் உண்மையான ஹீரோ ஸ்டாலின் தான். ரீல் ஹீரோவை நம்பி பயந்து விடாதீர்கள். பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆர்.டி.சேகரை தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலும் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் ஜி.பி. சாலையில் இருந்து நாகப்பா தெரு வழியாக தனது பிரச்சாரத்தை தொடங்கி, திறந்தவெளி ஆட்டோவில் தெருக்களில் சென்று வாக்கு சேகரித்தார். சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 63(அ), 114, 114(அ), 115 வார்டுகளுக்கு உட்பட்ட வீதிகளில் வாக்கு சேகரித்தார். தொகுதி மக்கள் பூக்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பிரசாரத்தில் பங்கேற்றனர்.

Related Stories: