அன்புமணி ஒன்னாம் நம்பர் சோம்பேறி, கல்யாணப் புடவை எடுக்க கூட பிளான் போடும் மனைவி: உண்மையான பாமக எது என்று தேர்தலுக்கு பிறகு தெரியும்; காந்திமதி ராமதாஸ் பேட்டி

சென்னை: உண்மையான பாமக எது என்று தேர்தலுக்கு பிறகு தெரியும் என காந்திமதி ராமதாஸ் தெரிவித்தார். தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக கிங்கராக திகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று குடும்ப பூசலால் இரு துருவங்களாக பிரிந்து நிற்கிறது. இந்நிலையில், ராமதாசின் நிழலாக உள்ள அவரது மகள் காந்திமதி, அன்புமணி மற்றும் அவரது மனைவி மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். மேலும், கட்சியின் நிலையை பற்றியும் விரிவாக பேசியுள்ளார்.

இத்தனை காலமும் நிழலாக மட்டுமே இருந்த நீங்கள், இப்போது ‘செயல் தலைவர்’ என்ற அதிகாரப்பூர்வமான பொறுப்பை ஏற்று முன்னுக்கு வந்திருப்பதன் அவசியம் என்ன? இது ஐயாவின் கட்டாயமா அல்லது உங்கள் விருப்பமா? எனக்கு ஆரம்பத்தில் அரசியலில் வர வேண்டும் என்ற எந்த விருப்பமும் இருந்ததில்லை; கடந்த 60 வருடங்களாக நான் என் அப்பா, அம்மாவுடனேயேதான் இருக்கிறேன். என் அம்மா, என்னைப் பார்க்காமல் இரண்டு நாட்கள் கூட இருக்க மாட்டார் . இந்த நிலையில், அப்பாவை தனிமைப்படுத்த அன்புமணி தரப்பு திட்டமிட்டபோது, என் அப்பாவுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன் ‘‘எனக்கு துணையாக யாரும் இல்லை, நீ வந்தால்தான் எனக்கு உதவியாக இருக்கும்” என்று அப்பா கேட்டதாலும், கட்சித் தொண்டர்கள் வற்புறுத்தியதாலும்தான் நான் இந்தச் செயல் தலைவர் பதவியையே ஏற்றேன் .

அன்புமணி கட்சியின் தலைவராக இருந்தும், டாக்டர் ஐயா மீண்டும் கட்சிப் பொறுப்புகளைத் தன் வசப்படுத்த வேண்டிய சூழல் ஏன் உருவானது? அவரிடம் ஐயா எதை எதிர்பார்க்கத் தவறினார்?”
அப்பா கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்தது போல் அன்புமணியும் செல்ல வேண்டும் என்று அப்பா 10 வருடங்களாகப் போராடினார். ஆனால் அன்புமணி, மந்திரி பதவி முடிந்த பிறகு 3 வருடங்களாக யாரையும் சந்திக்கவில்லை; ஒரு தனி ஆபீஸ் கூட போடவில்லை அவரைச் சந்தித்து அப்பாயின்ட்மென்ட் வாங்குவதே கட்சிக்காரர்களுக்கு கடினமாக இருந்தது. அவர் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை, அது அவருடைய ஒன்னாம் நம்பர் சோம்பேறித்தனம்; வீட்டிலேயே உட்கார்ந்து படம் பார்ப்பார், அவருக்கு வெளியே சென்று மக்களைப் பார்க்கப் பிடிக்காது. பண ஆசை மற்றும் பதவி ஆசைக்காகத்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். அவர் நாடாளுமன்றத்திற்கு (எம்.பி பதவிக்கு) கூட ஒழுங்காகப் போவதில்லை. அதனால் கட்சியை பலப்படுத்த அப்பா முயற்சி செய்தார். அதற்கு அன்புமணி ஒத்துக்கொள்ளவில்லை.

கட்சிக்குள் சவுமியா அன்புமணியின் தலையீடு அதிகரித்ததே இந்தப் பிரிவினைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறதே, ஒரு நாத்தனாராக அல்லது ஒரு அரசியல் தலைவராக இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?”
காந்திமதி ராமதாஸ்: இந்த குடும்பம் பிரிந்ததற்கும், இவ்வளவு பிரச்னைக்கும் முழு காரணமும் சவுமியாதான். அவர் எப்படிப்பட்டவர் என்றால், ஒரு கல்யாணத்துக்குப் புடவை எடுக்கச் சென்றால் கூட பிளான் ஏ, பி, சி என மூன்று திட்டங்களைப் போடுவார். எம்.பி, எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற ஆசைக்காகவே ‘பசுமைத் தாயகம்’, ‘மக்கள் தொலைக்காட்சி’ என ஒவ்வொன்றாகப் பிடுங்கிக்கொண்டனர். அவர்கள் 10 வருடமாகப் போட்ட பிளான், என் முதுகில் குத்தும் வரை எனக்கே தெரியவில்லை; அவருடன் மிகவும் நெருக்கமாக ஒன்றாகச் சுற்றிய எனக்கே அவர்கள் சதி தெரியாமல் போய்விட்டது. ‘‘அப்பா எப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்? வயதாகிவிட்டது கம்முனு இருக்க வேண்டியதுதானே” என்று அன்புமணி அடிக்கடி கேட்பார்.

அன்புமணியின் மகள்கள் (உங்கள் தம்பி பிள்ளைகள்) பொதுவெளியில் வைக்கும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? ‘தாத்தா தவறாக வழிநடத்தப்படுகிறார்’ என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
அன்புமணியின் மகள்கள் பேசுவது பொய். குடும்பமாக சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். பேரன் பேத்திகள் மீது என் தந்தை ராமதாஸ் உயிரையே வைத்துள்ளார். தினமும் வீடியோ கால் பேசி வந்த அப்பாவை, கடந்த 6 மாதங்களாகப் பேரப்பிள்ளைகளிடம் பேச விடாமல் தடுத்து வைத்துள்ளனர்; குழந்தைகளை எங்களிடம் காட்டவே இல்லை. ஐயாவை மன ரீதியாக துன்புறுத்த பார்க்கிறார். தேர்தல் பரப்புரையின் போது அப்பா மயக்கமடைந்து விழுந்து நாங்கள் பதறியபோது, வெறும் 30 கி.மீ தொலைவில் தர்மபுரியில் இருந்த அவர்கள் ஒருவர்கூட மருத்துவமனைக்கு வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஆனால், அன்புமணி அம்மாவைப் பார்க்க வரும்போது மட்டும் ஓட்டுக்காக கேமரா மற்றும் புகைப்படக் கலைஞர்களோடு வந்து 10 நிமிடம் வீடியோ எடுத்துவிட்டுச் செல்வது ஒரு நாடகம்.

தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தான் தலைவர் என்று சொல்கிறதே..?
காந்திமதி ராமதாஸ்: கட்சியைப் பிடுங்க வேண்டும் என்ற அவசரத்தில், அப்பாவுக்கு ”வயதாகிவிட்டது, மனநிலை சரியில்லை” என்று கோர்ட்டில் மிகவும் கேவலமாகச் சொன்னார்கள். 2022ல் நடந்த பொதுக்குழுவை, 2023ல் நடந்ததாகப் போலியாக ஆவணங்கள் தயாரித்து, ஆபீஸ் அட்ரஸை தங்கள் வீட்டுக்கு மாற்றித் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு ஏமாற்றியுள்ளனர்.

அன்புமணி உங்களை வாரிசு அரசியல் என்று சொல்கிறார்..?
காந்திமதி ராமதாஸ்: பாண்டிச்சேரியில் நடந்த பொதுக்குழுவில்தான் பிரச்னையே ஆரம்பமானது. அன்புமணி தனது மகளை இளைஞரணி தலைவராக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்பா, என் தம்பி மகனுக்குப் பொறுப்பு கொடுக்க நினைத்ததால் அன்புமணி அங்கேயே பிரச்னை செய்ய ஆரம்பித்தார் . என்னிடம் வந்து, ‘‘உன் மகன்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது” என்று சண்டையிட்டார் . இது வாரிசு அரசியல் இல்லையா..? எனக்கு அரசியல் மீது துளியும் விருப்பமில்லை, நான் அப்பாவுக்கு உதவவே வந்துள்ளேன். சின்ன வயதில் இருந்தே அப்பா பட்ட கஷ்டங்களைப் பார்த்ததால், என் மகன்களையும் அரசியலுக்கு வர வேண்டாம் என்றுதான் நான் சொல்லியிருந்தேன்.

அன்புமணியின் கூட்டணி நகர்வு குறித்து?
தன் மீதான வழக்குகளின் பயத்தால்தான் அன்புமணி பாஜ கூட்டணிக்குச் சென்றார். கடந்த முறை வேறு கூட்டணிக்கு சென்றிருந்தால் நமக்கு நிறைய எம்.பி.,க்கள் கிடைத்திருப்பார்கள்.
நாடாளுமன்றத்தில் 3 மசோதக்கள் தோல்வியடந்ததை எப்படி பார்க்கிறீர்கள்:
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைத்திருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தொகுதி மறுவரை தொடர்பாக திமுக, காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளின் செயல்பாடு வரவேற்கத்தக்கது. இந்த மசோதாக்கள் தொல்வியடந்தது என்டிஏ கூட்டணிக்கு பெரிய பின்னடைவு.
* கேள்வி: ஐயா ராமதாஸ் முதுமையின் காரணமாகச் சில முடிவுகளைச் சுயமாக எடுக்கவில்லை என அன்புமணி தரப்பு குற்றம் சாட்டுகிறதே? ஐயா இப்போதும் சுயமாகத்தான் கட்சி முடிவுகளை எடுக்கிறாரா?\\” அப்பா முடிவுகளை சுயமாக எடுக்கவில்லை என்பது பொய். எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுக்கிறார், அவரை மீறி யாரும் செயல்பட முடியாது. ஒருவேளை தேர்தல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இருந்திருந்தால், நான் வேறொரு கூட்டணி அமைத்திருப்பேன்.

பாமக இரண்டாக உள்ளது என தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனரே..?
காந்திமதி ராமதாஸ்: தன்னிடம் 90% கட்சி இருப்பதாக அன்புமணி கூறுவதெல்லாம் பொய். அவருக்கு தைரியம் இருந்தால் தனியாகக் கட்சி ஆரம்பித்திருக்க வேண்டும் . சின்னத்தையும் கட்சியையும் திருடிக்கொண்டு போய், இந்த வயதில் அப்பாவைப் பொருளாதார ரீதியாக தவிக்கவிட்டுவிட்டார். அப்பா இப்போது சுயமாக 108 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து கட்சியை மீண்டும் கட்டமைத்து வருகிறார் . அன்புமணி, நிர்வாகிகளிடம் பதவி ஆசையை சொல்லி நிர்வாகிகளை வாங்கிவிட்டார். எங்களிடம் தொண்டர்கள் உள்ளனர்.

உங்கள் தேர்தல் பிரசாரம் எப்படி உள்ளது.?
காந்திமதி ராமதாஸ்: அப்பாவை தனியாக விட்டுவிட்டுப் போக மனமில்லாததால்தான் என்னால் அதிக இடங்களில் பிரசாரம் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அப்பாவின் பெயருக்கே நிறைய வாக்குகள் எங்களுக்கு சாதகமாக உள்ளது. 36 தொகுதிகளில் இப்போது நிற்க வேண்டியது சவாலானது. ஒரு மாதத்திற்கு குறைவான நேரத்தில் புதிய சின்னத்தைக் கொண்டு சேர்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான். தேர்தல் முடிந்தபிறகு தான் உண்மையான பாமக எது என்று தெரியவரும். இந்த தேர்தல் முடிந்த பிறகு எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கட்சியை அடிமட்டத்தில் இருந்து கட்டமைத்து, பாமகவை மீண்டும் அடிமட்டத்தில் இருந்து மீட்டு ஒரு பெரிய பலமான கட்சியாக உறுதியாக உருவாக்கித் தருவேன். இவ்வாறு பதிலளித்தார்.

Related Stories: