பாஜ அரசின் கொள்கைகளால் மக்களுக்கு பல இழப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் வேதனை

மதுரை: பாஜ கொள்கைகளால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் பொதுமக்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார்.

பின்னர் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜவிற்கு அளிக்கும் வாக்காகும். கடந்த 10 ஆண்டுகளாக பாஜ அரசின் கொள்கைகள் காரணமாக மக்கள் பல்வேறு இழப்புகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். பல தொழில்கள் முடங்கியுள்ளன.

அதற்கு மாறாக, தமிழ்நாடு இன்றைக்கு தொழில் துறை மற்றும் கல்வி துறைகளில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக திகழ்கிறது. மேலும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்காக தமிழ்நாட்டின் எம்பிக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனவே, இந்த அனைத்தையும் சிந்தித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Related Stories: