திண்டிவனம்: தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 169 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, தேஜ கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளுக்கு 65 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தது. இதில் பாமக (அன்புமணி) அணிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சிக்கு பெரம்பூர், தருமபுரி, சேலம், விருத்தாசலம், பென்னாகரம், போளூர், திருப்போரூர், ஜெயங்கொண்டம், விக்கிரவாண்டி, மயிலாடுதுறை, உத்திரமேரூர், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்டவை கிடைத்தன. அங்கு அன்புமணி தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அன்புமணி பாமகவுக்கு எதிராக, போட்டி வேட்பாளர்களை ஆங்காங்கே ராமதாசும் களமிறக்கினார். தேர்தல் பிரசாரத்துக்கும் திட்டமிட்டிருந்த நிலையில் சேலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட பாதியிலேயே திட்டத்தை ரத்து செய்தார். தன்னால் பிரசாரத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதை நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த ராமதாஸ், உண்மையான பாட்டாளி சொந்தங்கள், என்மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ள வன்னிய சமுதாய மக்களும், எனது ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அன்புமணி நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக தர்மபுரியில் சவுமியாவை தோற்கடிக்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அன்புமணி நல்லபிள்ளை இல்லை… அவரும், அவரது குடும்பத்தினரும் நல்லா நடிக்கிறாங்க… நான் எப்போ சாவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாமென்ற ‘பேட் சர்டிபிகேட்’ கொடுத்தார். ராமதாஸ் பொதுவெளியில் பகிரங்கமாக பேசியது பாமக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமதாசே இவ்வாறு கூறிவிட்டதால், பாமகவில் இருக்கும் வன்னியர்கள் அன்புமணி மீது கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதன்தாக்கம் ஏப்ரல் 23ம்தேதி அன்று நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவின்போது எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மாம்பழம் சின்னத்தில் நிற்கும் அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு தோல்வி பயம் இப்போதே தொற்றிக் கொண்டுவிட்டது.
தங்களுக்கு கூட்டணி பலம் இருந்தாலும், தந்தை-மகன் இடையிலான நேரடி தேர்தல் குடும்ப சண்டை விவகாரம் வன்னிய மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், பாமகவின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியும் சிதறிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மேலும், ஆங்காங்கே 2 அணிகளின் நிர்வாகிகளும் பல தொகுதிகளில் மோதிக் கொள்வதும், யார் யார் எந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியாமல் தேஜ அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
