பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து கொளத்தூர் ராகவன் தெரு பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; என் ஓட்டை மாற்றிவிட்டு கொளத்தூருக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறேன். அந்தளவு சிறப்பாக உள்ளது. உலகமே இந்த தொகுதியை உற்று பார்க்கிறது. தமிழகத்திற்கு மட்டுமல்ல தென்னிந்தியாவின் வலிமையான குரல் ராகுலின் அண்ணன் ஸ்டாலின். அவருக்காக ராகுல் பிரசாரம் செய்கிறார்.
கடந்த தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் செய்யப்போகும் திட்டங்களை பட்டியலிட்டார். அதை அப்படியே செய்தார். உலகத்தில் இல்லாத திட்டங்களை அமல்படுத்தினார். காமராஜரின் சத்துணவு திட்டத்தை போல், இன்னும் 75 ஆண்டுகள் கழித்தும் காலை உணவு திட்டத்தை ஸ்டாலின் பெயர் சொல்லும். தமிழகத்தின் இரும்பு மனிதர் ஸ்டாலின்.கரூர் சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அதற்கு சம்பந்தப்பட்டவர் அங்கிருந்து நழுவி சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு, தனி நபர் ஆணையத்தையும் அமைத்தார்.
மோடி எதை கேட்டாலும் பழனிசாமி கையெழுத்து போட்டு விடுவார். இந்த தொகுதியில் முதல்வர் சாதாரண வெற்றி பெறக்கூடாது. ஒரு ஓட்டுக்கூட எதிரணிக்கு வரக்கூடாது. அளவுக்கு வெற்றி இருக்க வேண்டும். ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நமக்கு தேவையானதை கொடுப்பவர் ஸ்டாலின். அதை எடுப்பவர் மோடியும் பழனிசாமியும். தமிழகத்திற்கும் டில்லிக்குமான யுத்தத்தின் நாம் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
