பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 20 ஓவரில் 146 ரன்னுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய பெங்களூரு 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 23வது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீசியது. அதையடுத்து லக்னோவின் துவக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் களமிறங்கினர். ரசிக் சலாம் வீசிய 4வது ஓவரில் அய்டன் மார்க்ரம் (12 ரன்) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்த நிலையில் காயத்துடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் 1 ரன்னில், ஜோஷ் ஹசல்வுட் பந்தில் கிளீன் போல்டானார். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் (32 பந்து, 40 ரன்), க்ருணால் பாண்ட்யா வீசிய 10வது ஓவரில் வீழ்ந்தார். பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் அதன் பின்னும் அட்டகாசமாக பந்துகள் வீசி திணறடித்ததால், லக்னோ அணியின் ரன் வேகம் வெகுவாக கட்டுக்குள் வந்தது.
12வது ஓவரை வீசிய க்ருணால் பாண்ட்யா வீசிய மந்திரப் பந்தை எதிர்கொண்ட அப்துல் சமத், ரன் எடுக்காமல், ரஜத் படிதாரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதன் பின் ரசிக் சலாம் வீசிய 16வது ஓவரில் ஆயுஷ் படோனி (24 பந்து, 1 சிக்சர், 4 பவுண்டரி, 38 ரன்) ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்ததால், ஏற்கனவே காயமடைந்து வெளியேறிய கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் களத்தில் நுழைந்தார்.
இருப்பினும், புவனேஸ் குமார் வீசிய 17வது ஓவரில் ரிஷப் (1 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய புவனேஸ் குமார், 19வது ஓவரில் ஜார்ஜ் லிண்டே (7 ரன்), முகம்மது ஷமி (0 ரன்) ஆடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து, லக்னோ அணியை நிலைகுலையச் செய்தார். கடைசி ஓவரில் முகுல் சவுத்ரியை (28 பந்து, 2 சிக்சர், 3 பவுண்டரி, 39 ரன்), ரசிக் சலாம் வீழ்த்தினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆவேஷ் கான் (1 ரன்), கிளீன் போல்ட் ஆனார்.
அதனால், 20 ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூரு தரப்பில் ரசிக் சலாம் 4, புவனேஸ் குமார் 3, க்ருணால் பாண்ட்யா 2, ஹசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அதன் பிறகு களமிறங்கிய பெங்களூரு அணி 15.1 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
