தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு, அவரது மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாடி செல்வத்தை ஆதரித்து ஏரியூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அப்போது, ஜி.கே.மணியை தாக்கி ஆவேசமாகவும், கண்ணீர் மல்கவும் அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகிய இருவரும் பேசியிருப்பதாவது: எங்க அம்மா சவுமியா தர்மபுரியில் வேட்பாளராக நிக்கிறாங்க. நாங்க அம்மாவுக்காக பிரசாரம் பண்ண வந்தோம். பென்னாகரத்துல பெரிய துரோகம் நடக்குது. அந்த துரோகத்தை மக்களிடம் நாங்க பேச வந்துள்ளோம். தர்மபுரியை பற்றி கவலை இல்லை, நாம ஜெயிச்சிருலாம். அதெல்லாம் விட்டுருங்க. பென்னாகரத்தில் நாம ஜெயிச்சு ஆகணும். அதுக்காக தான் உங்கள பாக்க வந்து இருக்கோம். அவங்க பெரிய துரோகி. நாம வாய்ப்பு கொடுக்க கூடாது.
துரோகத்தை நாங்க கூட நின்று பார்த்தோம். சும்மா சொல்லலங்க. என்னால ஏத்துக்க முடியல. நாங்க எப்படி இருந்தோம்னு உங்களுக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொரு பொங்கல் நிகழ்ச்சிகளுக்கும், ஒன்றாக சேர்ந்து ஒண்ணா இருப்போம். அய்யா தான் நமக்கு வழிகாட்டி, குலதெய்வம். எல்லாரும் ஒன்றாக இருப்போம். (இதை பேசிக்கொண்டிருந்தபோது சஞ்சுத்ரா கண்ணீர் விட்டு அழுதார்). எனக்கு குழந்தை பிறந்திருக்கு, 5 மாசம் ஆகுது. அந்த குழந்தையை கூட தாத்தாவை ஜி.கே.மணி பார்க்க விடல. எங்கள் மீது தாத்தா எப்படி பாசமா இருப்பார் தெரியுமா?. பேரன், பேத்தி என்றால் அப்படி இருப்பாரு. ஆனா, இந்த துரோகி, அவன் புள்ள நல்லா இருக்கணும். எங்க குடும்பம் நாசமா போகணும்னு நினைக்கிறார். இதுபோன்ற கேவலமான மனித பிறவிய பார்க்கவே முடியாது.
ஜி.கே.மணியால் தான் எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை செய்ய முடிந்தது. அய்யா மனசை மாத்தியிருக்காங்க. சொந்த பையன நம்பாம, யாரோ ஒரு துரோகி சொல்வதை நம்புற மாதிரி மாத்தி இருக்காங்க. அவர்களுக்கு நல்லது செய்யணும்னு என்ற எண்ணம் இல்லை. அவர்களுக்கு பதவியில் இருக்கணும், பவர் இருக்கணும், பணம் இருக்கணும். எல்லாத்தையும் மயக்கி ஓட்டு வாங்கி, ஜி.கே.மணி மாதிரி எம்எல்ஏ ஆகி விடலாம் என தமிழ்க்குமரன் நினைக்கிறார். தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கிறார். தயாரிப்பாளர் என்றால் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பார்கள்.
அதிலும் சம்பாதிப்பாராம். உங்களிடமும் சம்பாதிப்பாராம். சென்னையில் ஜாலியா இருப்பாராம். நம்மளை மயக்கி ஓட்டு வாங்கிட்டு, எம்எல்ஏவாகி இங்கிருந்து ஓடி போயிருவாங்கலாம். என்ன இது அநியாயம்?. இந்த துரோகத்துக்கு காரணம் ஜிகே.மணி தான். அவர் பையன் நல்லா இருக்கணும். மத்தவங்க நாசமா போகட்டும் என்று நினைக்கிறார். இந்த துரோகிகளை அடித்து விரட்டுங்கள். அவங்களை துரத்த தான், உங்களிடம் நியாயம் கேட்டு வந்திருக்கிறோம். எங்களுக்கு நியாயத்தை கொடுப்பீங்கன்னு நாங்க நம்புறோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.
