தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: நடிகர் விஜய் வழக்கமாக திரைக்கதை அமைப்பில் தேர்ந்தவராக இருப்பதால், சினிமா பாணியில் சென்டிமென்டாக பேசி, தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விட வேண்டும் என்று தேர்தல் அறிக்கை சீன்களை விதவிதமாக அமைத்து, 11 லட்சம் கோடி கடன் இருக்கின்ற தமிழக அரசின் நிதிநிலை சூழ்நிலையில், நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றார்.
தேர்தல் அறிக்கை என்கிற பெயரில், லாட்டரி விற்கும் நபர் போல, லாட்டரி சீட்டு வாங்குங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள் என்று ஆசைவார்த்தைகளை லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்வது போல், எனக்கு வாக்களியுங்கள், உங்களை லட்சாதிபதி ஆக்குகிறேன் என்கிற பாணியில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நடிகர் விஜய் லாட்டரி அரசியல் வியாபாரத்திற்கு தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு, அனைத்து மாநில லாட்டரி சீட்டுகளை விற்பவர்கள் போல, அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்களை, இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை ஒவ்வொரு விஷயத்தையும் அதிகப்படியாக அறிவித்து விட்டால், தமிழக மக்கள் தனக்கு வாக்களித்து விடுவார்கள் என்று பகல் கனவு காண்கிறார்.
தேர்தல் அறிக்கை என்பது மக்களின் அடிப்படை வாழ்வுரிமை விஷயங்களில் ஒரு அரசியல் கட்சி ஆட்சி அமைக்கும் போது மாநிலத்தின் நிதி நிலைமையை பொறுத்து தான் வழங்க முடியும். வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தல் வாக்குறுதி அறிவித்து விட்டதால் ஒரு கையெழுத்தை உடனடியாக போட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை, தோல்வி பயத்தில், எப்படியாவது நடிகர் விஜயகாந்த்தை விட அதிகமாக பத்து சதவீத வாக்குகளை பெற்று விட வேண்டும் இன்று பதற்றத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது மக்களை முற்றிலும் ஏமாற்றும் தேர்தல் அறிக்கை. தேர்தல் கமிஷன் இதுபோன்ற தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை அளிக்க வேண்டும். விஜய்யின் தேர்தல் அறிக்கையில் எந்தவிதமான தொலைநோக்கு திட்டங்கள், மக்கள் நல திட்டங்கள் இல்லை. தன் கையால் ஒரு விவசாயிக்கு முதல் தேர்தல் அறிக்கை அளித்தேன் என்று கூறும் விஜய் விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கு, கைகளின் உயர்வுக்கு, மகிழ்ச்சிக்கு எந்தவிதமான தொலைநோக்கு திட்டங்களையும் குறிப்பிடவில்லை.
அதிமுக பாஜ தேர்தல் அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் காப்பியடித்து வெளியிட்டு இருப்பதன் மூலம் நடிகர் விஜய் இன்னும் கூட திருந்தவில்லை மக்கள் நல அரசியல்வாதியாக மாறவில்லை என்பதை தெளிவாக மக்களுக்கு உணர்த்திவிட்டார். விஜய்யின் மக்கள் விரோத லாட்டரி நாடக அரசியல் இனி எடுபடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
