தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சேலம் எருமாபாளையம் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து, தொகுதி வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு ெகாடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை சட்டம், தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் தென்தமிழ்நாட்டில் யாரும் பிரதமர் ஆக முடியாது. வடமாநிலங்களில் இந்துத்துவா அதிகமுள்ள இடங்களில் மட்டும் தொகுதிகளை அதிகப்படுத்துவார்கள். அதேநேரத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எண்ணிக்கை குறைக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவது தென்மாநிலங்கள் தான். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது.
2க்கு (2குழந்தைகள்) பிறகு எப்போதும் வேண்டாம். ஒன்று போதும் என முடிவு எடுத்து செயல்படுத்தினோம். தொகுதியை குறைப்பதை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. புரட்சி ஏற்படும். தமிழ்நாடு மக்கள் எல்லோரும் போராடுவார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒருபோதும் பறிகொடுக்க விட மாட்டோம். எனவே இந்த புதிய சட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
