1. உங்கள் தந்தை ஜெ.அன்பழகன் இந்தத் தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தவர். மக்கள் உங்களை இன்னும் ஜெ.அன்பழகனின் மகன் என்ற பார்வையிலேயே பார்க்கிறார்களா? இந்த அடையாளத்தைத் தாண்டி ராஜா அன்பழகன் என்ற ஒரு தனி முத்திரையை இந்தத் தொகுதிக்கு நீங்கள் எப்படிப் பதிக்கப்போகிறீர்கள்? நான் ஏற்கனவே 141வது வார்டு கவுன்சிலராக இருந்திருக்கிறேன். திமுகவில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். அதனால் ராஜா அன்பழகன் என்பது இன்று எல்லாருக்குமே தெரியும். அதேசமயம் ஜெ.அன்பழகன் மகன் என்பது என்னுடைய ஒரு அடையாளமாக இருப்பதில் பெருமையே.
2. பாண்டி பஜார் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் வசதிகள் இருந்தும், அவை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இதனால் தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதைக் குறைக்க உங்களிடம் ஏதேனும் திட்டங்கள் வாக்குறுதிகள் என்ன? உஸ்மான் சாலையில் கட்டப்பட்ட மேம்பாலத்தினால் இப்போது போக்குவரத்து ஓரளவுக்குக் குறைந்துள்ளது. அங்கு பார்க்கிங் ஒரு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.
சமீபத்தில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தை 10 முதல் 12 அடுக்குகள் கொண்ட வணிக வளாகமாகவும், அதில் ஒரு பகுதியை பார்க்கிங் வசதியாகவும் மாற்றும் திட்டம் உள்ளது. இப்பணிகள் முடிந்துவிட்டால் போக்குவரத்து மற்றும் பார்க்கிங் சிக்கலுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிடும். தியாகராய நகரில் தற்போது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இப்பணிகள் முடிந்துவிடும். அதன் பிறகு தியாகராய நகர் மிகவும் சுத்தமான மற்றும் நவீனமான நகரமாக மாறும்.
3. நீங்கள் ஏற்கனவே 141-வது வார்டு கவுன்சிலராக இருந்த அனுபவம், ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதிப் பணிகளைச் செய்ய உங்களுக்கு எப்படி உதவும்? நான் கவுன்சிலராக இருந்த வார்டு வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த ஒன்று. அங்குள்ள அனைத்து தரப்பு மக்களையும் நான் நேரடியாகச் சந்தித்துள்ளேன். குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் வடிகால் போன்ற அடிப்படைப் பிரச்னைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சரி செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. எனவே, தொகுதியின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயல்படுவது எனக்கு எளிதாக இருக்கும்.
4. இந்தத் தேர்தலில் தவெக மற்றும் அதிமுக தரப்பிலிருந்து கடும் போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியின் உட்கட்டமைப்பு குறித்து அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன? தொகுதி மக்களின் வரவேற்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது? எல்லா கட்சியினரும் விமர்சனங்களை முன்வைப்பது சகஜம்தான். தியாகராய நகரைப் பொறுத்தவரை போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக இடையேதான். அதிமுக வேட்பாளர் மீது ஏற்கனவே 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மேலும் 2023ல் எங்கள் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் அவர் மீது ஒரு வழக்கும் தொடர்ந்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல்கள் எனப் பல புகார்கள் அவர்கள் மீது உள்ளன. இப்பகுதி மக்கள் என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்க்கிறார்கள். நான் தியாகராய நகரிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால் எனக்குத் தனி அறிமுகம் தேவையில்லை. மக்கள் இயல்பாகப் பழகுகிறார்கள், இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள், எனவே தியாகராய நகரில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.
