விஜய் செயல்பாடு பிடிக்கலன்னு சொன்ன முதியவருக்கு அடி செருப்பு வீச்சு: தவெக நிர்வாகி மீது வழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். கிழக்கு தொகுதி ஏர்போர்ட் பகுதி செயலாளர் வினோத்குமார் (32) தலைமையில் 5க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் கே.கே.நகர், சேசாயி நகருக்கு நேற்றுமுன்தினம் இரவு வாக்கு சேரிக்க சென்றனர். அங்கு விசில் அடித்தப்படி வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிவக்குமார் (64) என்பவர் தனது மனைவியுடன் வெளியே வந்து, தங்கள் வீட்டில் ஓட்டு கேட்க வரவேண்டாம். விஜய் செயல்பாடு பிடிக்கவில்லை என கூறி உள்ளதாக தெரிகிறது.

அப்போது, ஆத்திரமடைந்த தவெகவினர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால், இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒரு கட்டத்தில் தவெகவினர் முதியவர் மீது செருப்பை வீசினர். பதிலுக்கு அவர் கட்டையால் தாக்கினார். இதனால், தவெகவினரும் கொடி கம்பத்தை வைத்து தாக்கினர். இதில் முதியவர் சிவக்குமார், தவெக பெண் நிர்வாகி காயமடைந்தனர். தகவல் அறிந்து கே.கே.நகர் போலீசார் வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இதுதொடர்பாக தவெக நிர்வாகி வினோத்குமார், முதியவர் சிவக்குமார் ஆகியோர் கே.கே.நகர் போலீசாரிடம் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் சிவக்குமார் கொடுத்த புகாரில், கொடி கம்பத்தால் தாக்கிய தவெக நிர்வாகி வினோத்குமார் மீது பொது இடத்தில் தகராறு செய்தல், பொதுமக்களை தொந்தரவு செய்தல், வேண்டுமென்றே தாக்குதல் நடத்தல், மிரட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல தவெக நிர்வாகி வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதியவர் சிவக்குமார் மீது பொது இடத்தில் தகராறு செய்தல், பொதுமக்களை தொந்தரவு செய்தல், பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: