நெல்லையை போல் சாத்தூரிலும் சாதி மோதலை ஏற்படுத்துவார்; நயினாருக்கு வாக்களிக்க மாட்டோம்: தேவேந்திர குல வேளாளர் சமூகம் அதிரடி அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கு மக்களின் கோரிக்கைகள் எதையும் கண்டுகொள்ளாததால், இந்த முறை அவரை தோற்கடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதை மோப்பம் பிடித்த நயினார் நாகேந்திரன், தனது சொந்த சமூகமான முக்குலத்தோர் வாக்கு 27 சதவீதம் உள்ள சாத்தூர் தொகுதிக்கு தாவினார்.

அங்கு தனது சமூக வாக்கு, அதிமுக, அமமுக வாக்குகளை வைத்து எளிதாக வெற்றிக்கனியை பறித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார். ஆனால், தொகுதியை தங்களுக்கு ஒதுக்காத அதிருப்தியில் அதிமுக, அமமுகவினர் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கி கொண்டனர். முக்குலத்தோர் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சசிகலா கட்சி சார்பில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா இறக்கி விடப்பட்டுள்ளார். இதன் காரணமாக முக்குலத்தோர் சமூக வாக்கு நயினாருக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்பே இல்லை.

இதனால் செய்வதறியாமல் நிற்கும் நயினார், தனது சொந்த ஊரில் இருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து தேர்தல் வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் சாத்தூர் தொகுதியில் 24 சதவீதம் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் திடீரென நயினார் நாகேந்திரனுக்கு எதிராக திரும்பியுள்ளனர். சமீபத்தில் முக்கிய பிரமுகர்கள் ஊர்கூட்டம் நடத்தி, நயினாருக்கு வாக்களிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நயினார் நாகேந்திரன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தேசிய தலைவர் கிஷோர் மக்வானா என்பவரை, சாத்தூருக்கு நேற்று வரவழைத்தார். தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம்போட்டு, தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர்கள், பெண்களை வரவழைத்து, ‘‘உங்களுக்கு தேவையான நிதி வழங்கப்படும், தாட்கோ மூலம் தொழில் செய்ய கடன் வழங்கப்படும்’’ என கூறியுள்ளனர்.

ஆனால் அவரது பேச்சை கேட்காமல் பாதியிலேயே பெரும்பாலானோர் எழுந்து வெளியே சென்று விட்டனர். இதனால் நயினார் தரப்பு அப்செட் ஆகியுள்ளனர். இதுகுறித்து சாத்தூரை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக முக்கிய பிரமுகர்கள் கூறுகையில், ‘‘நெல்லையில் நயினார் நாகேந்திரன் சார்ந்த சமூகத்தினருக்கும், தேவேந்திரகுல வேளாளர், நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதல் உயிர்ப்பலி வரை சென்றுள்ளது. நயினார் நாகேந்திரன் நெல்லையில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் எம்எல்ஏவாக இருந்த காலத்தில் இந்த மோதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தனது சொந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில், இதன் பின்னணியில் இருந்து நயினார் ஊக்குவித்து வருகிறாரோ என்ற சந்தேகம் நீண்டகாலமாகவே எங்களுக்கு உள்ளது.

சாத்தூர் தொகுதியில் ஒருவேளை நயினார் வெற்றிபெற்றால் நெல்லையைபோல் சாதிய மோதல்கள், தினமும் வெட்டு குத்து, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என அமைதியில்லாமல் போய்விடும் என்ற அச்சம் உள்ளது. எனவே எங்களது வாக்குகளை அவருக்கு செலுத்தக்கூடாது என்று தீர்மானித்துள்ளோம். மாறாக, சாத்தூருக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்துள்ள திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: