நாகப்பட்டினம் தொகுதி நாதக வேட்பாளர் பாத்திமா பர்ஹானா, கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகா ஆகியோரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரத்தில் பேசியதாவது: நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுக்காது. இலவசங்களை வாரி இரைக்காது. மக்கள் பிரச்னைகளுக்கு மக்களோடு மக்களாக நின்று போராடுவோம்.
பிரபாகரன் ஆவி இருக்கும் வரை தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது. செம்மர கட்டை கடத்தியதாக தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு மோடி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. செம்மரக்கட்டை கடத்த சொன்ன முதலாளியை என்ன செய்தீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியினர் கத்தி, கத்தி சாவுகிறோம். எடப்பாடி 3 சிலிண்டர் இலவசம் என கூறுகிறார். விஜய் 6 சிலிண்டர் இலவசம் என அறிவிக்கிறார்.
கேட்டால் விஜய் சூப்பர் 6 என பேசுகிறார். கிரிக்கெட்டில் தான் சூப்பர் 6 ஆனால் தேர்தல் அறிக்கையில் விஜய் சூப்பர் 6 என பேசுகிறார். நான் முதல்வர் ஆனால் டாஸ்மாக் கடையை மூடுவேன். அதற்கு பதிலாக மாடுகள் வளர்த்து பால் கறந்து அதில் இருந்து வரும் வருமானத்தை பெருக்குவேன். நானே விவசாயம் செய்வேன். அதன் மூலம் வரும் வருமானத்தை அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.
