தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்படும்: ப.சிதம்பரம் உறுதி

புதுக்கோட்டை: தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்படும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் சாசன திருத்த சட்டம் பாதிக்குமா, பாதிக்காதா? என்று கேட்டால் நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்து தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒன்று பாதிக்கும் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாதிக்காது என்று சொல்ல வேண்டும். அல்லது விடுங்கப்பா எனக்கு ஒன்றும் தெரியாது என்று போயிருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன சொல்கிறார் அமித்ஷாவிடம் கேட்டேன், அமித்ஷா பாதிக்காது என்றார், அதனால் பாதிக்காது என்கிறார்.

அமித்ஷா அவரது கட்சியின் தலைவரா? அமித்ஷா சொல்வதையும், நரேந்திர மோடி சொல்வதையும் நாங்கள் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். ஏற்றுக்கொள்ளவில்லை. தொகுதி மறுவரையறை சட்டத்தை முழுமையாக படித்து விட்டேன். அந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மிகப்பெரிய கேடு தமிழ்நாட்டிற்கு ஏற்படும். தமிழ்நாட்டினுடைய எண்ணிக்கை 39 லிருந்து 58 நாடாளுமன்ற தொகுதியாக மாறும் என்பது மாயை. பின்னர் மறுசீரமைப்பு மறு வரையறையில் மளமளவென குறைந்து 46 ஆகப்போய்விடும். நாம் 39 லிருந்து 46 க்கு செல்வோம் அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் 80லிருந்து 120க்கு சென்று 120லிருந்து 140க்கு போய்விடும்.

80க்கும் 39க்கும் வித்தியாசம் பிறகு 140க்கும் 46க்கும் வித்தியாசம். ஏறத்தாழ 90 சீட்டுகள் வித்தியாசப்படுகிறது.அதனால் பத்திரிகையாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கட்டும். இதுபோன்ற ஒரு கணக்கு சொல்கிறார்களே, இதைப்பற்றிய கணக்கு என்ன என்று கேளுங்கள், உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அவர் எனக்கு ஒன்னும் தெரியவில்லை என்று செல்ல வேண்டும். எங்களுக்கு 180 க்கு மேல் வலிமை இருக்கிறது. 180ஐ வெல்வதற்கு அவர்களிடம் ஓட்டு கிடையாது. இந்த அரசியல் திருத்த மசோதா தோற்கடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: