×

தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் எக்ஸ் தள பதிவு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543லிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026 மூலம், மக்களவையின் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா இன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும், இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.

ஒன்றிய அரசின் அறிவிப்பை ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு தண்டனையையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு வெகுமதியும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப்பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. இப்படி பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு மசோதா 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Tags : Union government ,Vijay ,Chennai ,Thaweka ,Lok Sabha ,
× RELATED கிறிஸ்தவர்களுக்கு எதிரான எப்சிஆர்ஏ...