×

அதிமுக-பாஜ கூட்டணி வென்றால் மசூதி,சர்ச்சுகள் இடிக்கப்படும் குடியிருப்புகள் கொளுத்தப்படும்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, சோழத்தரம், குமாரகுடி பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுகவால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற திமுக ஆட்சியை தொடர வேண்டும். அதிமுக, பாஜ கூட்டணி வலுப்பெற்றால் தமிழகத்தில் ஆபத்து ஏற்படும். அதிமுக, பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெறுவது போன்று மசூதிகள் இடிப்பு, கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிப்பு, குடியிருப்புகளை கொளுத்துவது போன்ற வன்முறை நடைபெறும். அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியாக ஸ்ரீமுஷ்ணம் இருந்ததை அதிலிருந்து நீக்கியது அதிமுக. இதற்காக ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தேன். தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக ஆட்சியில் இப்பகுதி காவிரி டெல்டாவாக அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* தொகுதி மறுவரையறை அரசியல் சாசனத்துக்கு, கூட்டாட்சிக்கு எதிரானது: துரை வைகோ கண்டனம்
திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளரும், எம்பியுமான துரை வைகோ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் அவசர அவசரமாக இதை கொண்டு வருகிறார்கள். பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் மசோதா அமல்படுத்த கூடாது. ஏற்கனவே பாஜ ஆளாத மாநிலங்களுக்கு உரிய திட்டங்கள், நிதி வழங்கப்படுவதில்லை.

கலாச்சார திணிப்பு, மொழி திணிப்பு என எல்லா திணிப்புகளையும் மேற்கொண்டு இருக்கும் போது எம்பிக்களால் தான் சிறிதளவாவது அதை காக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் அதையும் செய்ய முடியாது. தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகம், அரசியல் சாசனத்துக்கு, கூட்டாட்சிக்கு எதிரானது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக நிறைவேற்றியது தென் மாநிலங்கள் தான். பாஜவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இதை எதிர்க்கின்றன. இதற்கு எதிராக பாஜ கூட்டணியில் உள்ள அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை மக்களின் பிரதிபலிப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* விஜய்க்கு அளிக்கும் வாக்கு பாஜவுக்கான மறைமுக ஆதரவு
‘‘விஜய் கட்சியில் கட்டமைப்பு இல்லை. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் அதிக அளவு கூட்டம் வருவது உண்மைதான், ஆனால் அது வாக்காக மாற வாய்ப்பில்லை. விஜய்க்கு அளிக்கும் வாக்கு பாஜவிற்கு மறைமுக ஆதரவாக போய் விடும் என அவரை ஆதரிக்கும் சிலரே சிந்திக்கிறார்கள். விஜய்க்கு 15 சதவீதம் வாக்குகள் வாங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. அதனால் தற்போது தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. விஜய்க்கு முதல் தலைமுறை வாக்குகள் ஓரளவு உள்ளது, ஆனால் அவர்கள் வாக்களிக்க வருவார்களா என்பதே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் நாளன்று பிக்னிக் சென்று விடுவார்கள். எம்ஜிஆரையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது. எம்ஜிஆர் நீண்ட காலம் திமுகவில் பயணித்து ஈடுபட்டவர். ஆனால் விஜய் கட்சியில், அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லை. அங்கு கட்டமைப்பு இல்லை’’ என்று துரைவைகோ தெரிவித்தார்.

Tags : AIADMK ,BJP ,Thirumavalavan ,Viduthalai Siruthai Party ,Srimushnam Nachiyarpet ,Palayankottai ,Cholatharam ,Kumaragudi ,Cuddalore district ,DMK ,Chidambaram ,Villupuram ,
× RELATED தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும்...