×

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி: தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும்; அமைச்சர் மெய்யநாதன்

1. திராவிட மாடல் ஆட்சி மக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என தமிழக முதலமைச்சரின் திட்டங்கள் எல்லா இடங்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. தரமான சாலைகள், குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. மக்களின் பல்வேறு பிரச்னைகள் மைக்ரோ லெவலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலமாக பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு, கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீத பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதனால் எங்கு சென்றாலும் மக்கள் பெரிய வரவேற்பு தருகிறார்கள். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்கள் கொண்டு வந்ததால் மக்கள் மத்தியில் திராவிட மாடல் ஆட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. செல்லும் இடமெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம், ஆரவாரமான வரவேற்பு கிடைக்கிறது. அனைவரும் எங்களை வெற்றித் திலகமிட்டு வாழ்த்துவதைப் பார்க்கும்போது, முதலமைச்சரின் ஐந்தாண்டு கால சாதனைகள் மக்களிடம் நல்லபடியாகச் சென்று சேர்ந்திருக்கிறது தெரிகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

2. 5 முனைப் போட்டியை திமுக கூட்டணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
ஐந்து முனைப் போட்டி, நாலு முனைப் போட்டி எல்லாம் கிடையாது. இப்பொழுது முதலிடத்தில் இருப்பது நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான். எல்லா இடங்களிலும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளோடு களம் காண்கிறோம். அதிமுக, பாஜ போன்ற மற்ற கட்சிகள் தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டுள்ளன. எனவே, இந்த தேர்தல் முடிவில் 210 தொகுதிக்கும் மேலாக திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. முதலமைச்சர் மீதான ஆதரவு மக்களிடையே ஒரு பேரலையாக மாறியிருக்கிறது. குறிப்பாக பெண்கள் வாக்குகள் 90 சதவீதம் மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

3. ஆலங்குடி தொகுதியில் உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? திமுக இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சி செய்ததாகச் சரித்திரமே இல்லை என்று பேசப்படுகிறதே?
ஆலங்குடி தொகுதியைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.2000 கோடிக்கும் மேலான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். அந்த அடிப்படையில் 50 முதல் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ஆலங்குடி தொகுதி மக்கள் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். களத்தில் எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் வாழ்த்துகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. அண்ணா மறைவுக்குப் பிறகு, 1967ல் ஆட்சிக்கு வந்து 1971ல் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாகத் தொடர்ந்து வெற்றி பெற்று கலைஞர் சாதனை படைத்திருக்கிறார். அதே சாதனையை இந்த 2026ல் திமுக மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று நிகழ்த்தும். இது இந்தியாவே வியந்து பார்க்கக்கூடிய ஒரு மகத்தான வெற்றியாக இருக்கும். நம் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் குரல் மீண்டும் தமிழ்நாட்டில் ஒலிக்கும்.

4. முதலமைச்சர் குறித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சர்ச்சையாகப் பேசி வருகிறாரே, இது குறித்து உங்கள் கருத்து என்ன?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. திமுக தான் ஜெயிக்கப் போகிறது, தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போய்விடுமோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் செல்லும் இடமெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் முதலமைச்சரைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது. தேர்தலுக்கு முன்னரே அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்பதையே இது காட்டுகிறது.

* அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க… இரட்டை இலையை வச்சி ஜெயிக்கலாம் என்பது பகல் கனவு; சசிகலா ‘ஒரே போடு’
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய சசிகலா, இந்த தேர்தலில் ராமதாசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். தற்போது தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் சசிகலா, கடலூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது சசிகலா பேசுகையில், ‘நான் 15 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்துள்ளேன். எப்படி அரசாங்கம் நடத்துவது என்பது தெரியும். சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை வைத்துக்கொண்டு ஜெயிக்கலாம் என பகல் கனவு காண்கிறார் அவர். இரட்டை இலை எம்.ஜி.ஆர் உருவாக்கியது, ஜெயலலிதா வைத்திருந்தார். மக்களுக்கு இது நன்கு தெரியும். தற்போது அதிமுகவில் சரியில்லாத நபர்கள் உள்ளனர். தான் வாழ்ந்தால் போதும் என நினைக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் அதிமுக தரப்பு பிரிட்ஜ், ரூ. 10 ஆயிரம் வழங்குவதாக தெரிவிப்பது பொய்ப்பித்தலாட்டம். இவர்களுக்கு ஓட்டு போடாதீங்க’’ என்றார். தேர்தல் பிரசாரத்தின் போது ஏசி வேனில் இருந்தபடியே சசிகலா பேசிய நிலையில், வெயில் தாக்கத்தால் வேனுக்கு குடை பிடித்தபடி பாதுகாவலர்கள் நின்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Minister ,Meiyanathan ,Kalaignar Dream Home ,Kalaignar Women… ,
× RELATED தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும்...