சென்னை: மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சி நடப்பதாக கூறியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அனைத்து மாநிலங்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், பாஜ அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து. ப.சிதம்பரம் நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளபதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது. மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன். தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும். அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும். மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும். மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும். எனவே, அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
