×

எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மூடப்படுவதாக விஜய் பொய் பிரசாரம் செய்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தவெக தலைவர் நடிகர் விஜய் நேற்று திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் சிறு தொழில்களை மூடியது தான் திமுக அரசின் சாதனை என உண்மைக்கு புறம்பாக பிரசாரம் செய்துள்ளார். அவர் யாரோ எழுதி கொடுப்பதை அப்படியே படிக்கிறார். 2024-25ம் ஆண்டில் தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் வளர்ச்சியடைந்து இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பதிவு செய்வதில் தமிழ்நாட்டில் 31.3.2026 வரையிலான காலத்தில் 41.79 லட்சம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு செய்து 3.2 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. எம்எஸ்எம்இ துறைக்கு 2020-21ம் நிதியாண்டில் அதிமுக ஆட்சியில் ரூ.545.62 கோடி என இருந்த நிதி ஒதுக்கீடு 2025-26ம் நிதியாண்டில் ரூ.1918.22 கோடி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் 6 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 84,345 நபர்களுக்கு ரூ.2587.59 கோடி மானியத்துடன் ரூ.6679.11 கோடி கடன் வழங்கப்பட்டு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது.

10 வகையான மானியப்பட்டியல் கீழ் 24,202 எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1728.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தொழில் கூடங்கள் அமைக்க கடந்த 5 ஆண்டுகளில், 13 மாவட்டங்களில் ரூ.387 கோடி மதிப்பீட்டில் 697.81 ஏக்கர் பரப்பளவில் 17 சிட்கோ தொழில்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் 543.31 ஏக்கர் பரப்பளவில் ரூ.419 கோடியே 58 லட்சம் மதிப்பில் 16 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் எவ்வித உதவியும் இன்றி, தமிழ்நாட்டில் 41.79 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாகியுள்ளார். எனவே, எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என்கின்ற தவெக தலைவர் நடிகர் விஜயின் பொய் பிரசாரம் உண்மைக்கு புறம்பானது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vijay ,Minister Tha.Mo.Anparasan ,Chennai ,Small and Medium Enterprises ,Tha.Mo.Anparasan ,DMK government ,Tiruppur ,
× RELATED கிறிஸ்தவர்களுக்கு எதிரான எப்சிஆர்ஏ...