* அது எப்படி உ.பி.க்கு மட்டும் 40 சீட் ஏறும்
* அமித்ஷாவுக்கு துதிபாடுவதாக இபிஎஸ் மீது தாக்கு
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது, நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதுமாதிரியான காலக்கட்டங்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவது மரபு அல்ல. ஆனால், இந்த மரபுகளை உடைத்து, ஒன்றிய பாஜ அரசு அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுகிறது.
ஏப்ரல் 16ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக, 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஏப்ரல் 29ம் தேதி கூட்டலாமே. இதுதொடர்பாக எதிர்கட்சிகள் வைக்கிற கோரிக்கையை ஒன்றிய பாஜ அரசு பரிசீலனைகூட செய்வதில்லை. 5 மாநில தேர்தல் நடக்கும்போது பெரும்பாலான எம்.பி.க்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிடுவார்கள். இந்த நேரத்தில் அவையை கூட்டினால், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல், மசோதாவை நிறைவேற்றி விடலாம் என கணக்கிட்டு, ஏமாற்று வித்தையை ஒன்றிய பாஜ அரசு செய்கிறது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு இல்லாமல், நியாயமான மறுசீரமைப்பு வேண்டும் என்றுதான் கேட்கிறோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்றால், தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், 32 ஆக குறையும். இது சாதாரண மக்களுக்கும் தெரியும். ஆனால் இப்போது தொகுதி மறுசேரமைப்பு எனக்கூறி 39 தொகுதிகளை 52 ஆக உயர்த்தி, பிறகு அதை 48 ஆக குறைக்கிறார்கள். இவை அனைத்தும் ஏமாற்று வேலை.
தமிழ்நாட்டு மக்கள் விபரம் அறியாதவர்கள் அல்ல. தமிழ்நாட்டில் 48 ஆக மாறும் நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகள் 120 ஆக உயருகிறது. இந்த இடைவெளி அதிகம். ஆனால், விகிதாச்சாரம் குறைவு. இது, தென்மாநிலங்களை பாதிக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 24.5 சதவீத விகிதாச்சாரம் என்பது இனி 20.7 சதவீதமாக குறையும். இதன்மூலம், தென்மாநில மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஏற்கனவே, ஒன்றிய பா.ஜ அரசு, தென்மாநிலங்களை ஒதுக்கி வைத்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், தென்மாநிலங்கள் மேலும் பாதிக்கப்படும்.
இந்த பேராபத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும். ஆனாலும், அவர், தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல், அமித்ஷாவுக்கு துதி பாடுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக, திமுக தனது பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
* தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) கோவை, ஈரோடு
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) பெரும்புதூர்
வைகோ
(மதிமுக பொதுச்செயலாளர்) கும்பகோணம்,
வில்லிப்புத்தூர்
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சாத்தூர்
பெ.சண்முகம்
(சி.பி.எம்.மாநில செயலாளர்) பழனி, ஒட்டன்சத்திரம்
மு.வீரபாண்டியன்
(சி.பி.ஐ.மாநில செயலாளர்) கீழ்வேளூர்,
கும்பகோணம்
திருமாவளவன்
(வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) விருதுநகர்
அன்புமணி
(பாமக தலைவர்) பாலக்கோடு, பென்னாகரம்
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) சென்னை
சீமான் (நாதக
ஒருங்கிணைப்பாளர்) நாகப்பட்டினம்,
திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம்
டி.டி.வி.தினகரன்
(அமமுக பொதுச்செயலாளர்) நாங்குநேரி,
ஒட்டப்பிடாரம்
விஜய் (தவெக தலைவர்) சென்னை
