ராமநாதபுரம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று மாலை ராமநாதபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் நாகேந்திரனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: அமையும். பிரதமர் மோடி தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி நிதி வழங்கியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லப்படும். காசியை போல் ராமேஸ்வரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஈரான்-அமெரிக்கா போரால் ஈரானில் தவித்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 50 பேர் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட நமது மீனவர்களை பிரதமர் மீட்டுக் கொண்டு வந்தார். இவ்வாறு பேசினார்.
நிதின் நபின் பேசியபோது, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குங்கள் என பேசவில்லை. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கிறது, கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்நிலையில் தேஜ கூட்டணி ஆட்சி அமைய வாக்களியுங்கள் என பேசியது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* அண்ணாமலைக்காக நிதின் நபின் காத்திருப்பு
மதுரை, குயவர்பாளையம் ரோட்டில் கீழ்மதுரை ரோடு சந்திப்பில் இருந்து முனிச்சாலை சந்திப்பு டிஎம்எஸ் சிலை சாலை வரையிலும் நேற்று மாலை 6 மணிக்கு ஷோ நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அழைப்பு விடப்பட்டிருந்தது. இதில் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் எம்பி., தலைமையில், முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. நேற்றிரவு எட்டே கால் மணி வரையிலும் இப்பகுதிக்கு யாருமே வரவில்லை.
எட்டேகால் மணிக்கு மேல் நிதின் நபின் எம்பி, வந்ததும், ரோடு ஷோ துவங்கிய இடத்திற்கு நிர்வாகிகள் ஆங்காங்கே நின்றிருந்தவர்களை அழைத்து வந்து இழுத்துச் சேர்த்தனர். அப்போது அண்ணாமலை அங்கில்லை. அவரது வருகைக்காக நிதின் நபின் காத்திருந்தும் வராததால், இதற்கு மேலும் காசு கொடுத்து அழைத்து வந்த மக்களை இழுத்துப்பிடித்து வைக்க முடியாது என்ற நிலையில், வாகனத்தை மெல்ல நகர்த்தத் துவங்கினர். வெகு நேரத்திற்கு பிறகு அங்கு வந்த அண்ணாமலையை, ரோடு ஷோவில் பாதியில் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.
