சிக்கண்ணா அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிறைவு விழா

திருப்பூர், பிப். 21: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் மாநகர காவல்துறை ஆகியவை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிறைவு விழா கல்லூரி குமரன் அரங்கில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பேசுகையில், இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். மாணவர்களாகிய நீங்கள், சாலை விபத்துகள் குறித்து உங்கள் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  போலீசாருடன், மாணவர்களும் இணைந்து விபத்தில்லா திருப்பூரை உருவாக்க வேண்டும், என்றார். இதையடுத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பங்களிப்பு சான்றிதழும் வழங்கினார். முடிவில், மாணவ செயலர் சந்தோஷ் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் போக்குவர்த்து உதவி கமிஷனர் கொடிச்செல்வன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன் மற்றும் தினேஷ், கணேஷ், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: