சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் பூத் சிலிப் விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. வரும் 18ம் தேதிக்குள் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இன்னும் 10 நாட்களே உள்ளன. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பணம் பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் முகாமிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்படும் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தேர்தலுக்கான தேதி நெருங்கி வருவதால் வாகன சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. வாக்குசாவடி மையங்களில் ஆய்வு, வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கும் அறைகளை ஏற்படுத்துவது போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
அதே நேரத்தில் கடந்த தேர்தல்களில் வழங்கப்பட்டு வந்த புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்களுக்கு பதிலாக, இந்த முறை தேர்தல் ஆணையம், வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட வடிவமைப்பில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் உதவியாக இருக்கும்படி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு வாக்காளரின் பெயர், வயது, பாலினம், சட்டமன்றத் தொகுதி, வாக்குச்சாவடி அமைவிடம் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி, நேரம் போன்ற விவரங்கள் அடங்கியுள்ளன. அதேபோல் க்யூஆர் குறியீடும் இடம்பெற்றுள்ளது. இதன் மூவம் வாக்காளர்கள் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கும் நேரடியாக வீடு தேடி சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகத்திற்கான அட்டவணையை தயாரித்து உள்ளனர். அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வினியோகித்து வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டினை வழங்கி கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தைப் பெற்று வருகின்றனர். விநியோகிக்கப்படாத வாக்காளர் தகவல் சீட்டு அனைத்தும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற 18ம் தேதிக்குள் வாக்காளர் தகவல் பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
