கூடுவாஞ்சேரி: திமுக சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, செங்கல்பட்டு தொகுதியில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனையடுத்து காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர், பாலூர், திம்மாவரம், பழவேலி மற்றும் வில்லியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி திறந்த ஜீப்பில் நின்றபடி பேசுகையில், ”என்னை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்தால், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செங்கல்பட்டு தொகுதியில் செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். என்னுடைய முழு நேர பணியே மக்கள் சேவைதான். எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ”நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளீர்கள். இதுபோல் செங்கல்பட்டு தொகுதிக்கும் நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆகவே, எங்களுடைய ஓட்டு உங்களுக்குதான்” என உறுதியுடன் கூறினர்.
இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அருள்தேவி, செங்கல்பட்டு நகர செய லாளர் நரேந்திரன், நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், துணை தலைவர் அன்புசெழியன், மத்திய ஒன்றிய செயலாளர் வக்கீல் பி.ராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தேமுதிக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம்லீக், வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்டிபிஐ, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
