சென்னை: சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் திரைப்படம் வெளியான நாளில் இருந்து 7 நாட்களுக்குள் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியும் உள்ளூர் விடுமுறை, அரசு விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிறில் 5 காட்சிகள் வெளியிட அனுமதி வழங்கியும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; ‘தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘C’ படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
