சென்னை: அமைச்சர் பதவி தருவதாக விஜய் ஏமாற்றியதன் எதிரொலியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி அணி சமாதானம் ஆகியுள்ளது. சென்னையில் இன்று இருவரும் முக்கிய பேச்சு நடத்துகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது. பின்னர் திமுக கூட்டணியில் இருந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தானாக வந்து ஆதரவு தெரிவித்தது.
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 எம்எல்ஏக்கள், ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 2 தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்தார். இதைத் தொடர்ந்து தவெகவின் பலம் 120 ஆனது. இந்த கட்சிகளுடன் ஆதரவுடன் மே 10ம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் அதிமுகவில் தொடர் தோல்விகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பொதுக்குழுவை கூட்டி தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும்.
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலக வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு வலியுறுத்தியது. இதனால் அதிமுக உடையும் நிலை உருவானது. அதே நேரத்தில் ஆதரவு அளித்த கட்சிகளில் யாராவது வெளியில் போனால் தவெக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படும். இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தரப்பின் ஆதரவை பெற தவெக முடிவு செய்தது. அவர்கள் ஆதரவு அளித்தால் 5 வருடம் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆட்சியை நடத்தி விடலாம் என்று விஜய் திட்டமிட்டார்.
இந்த நிலையில் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பிடம் தவெக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களுடன் விஜய், ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.பி.வேலு மணி தரப்பு எங்களுக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று முதலில் தெரிவித்தனர். தொடர்ந்து எம்எல்ஏக்கள் குறைந்தது. கடைசியில் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தனர். எனவே, 12 அமைச்சர்கள் பதவி தர வேண்டும்.
மீதி உள்ள எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பு பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தியது. கடைசியாக 7 அமைச்சர்கள் வரை தர விஜய் முடிவு செய்தார். இதையடுத்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து அதிமுக எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் எம்எல்ஏக்களுக்கு 15 சி வரை கொடுப்பதாக ஒப்பு கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதில் பலருக்கு பணமும் செட்டில் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை நம்பி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு அதிமுக எஸ்.பி.வேலுமணியின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அதேபோல, அதிமுகவில் தாங்கள் தான் பெரும்பான்மை என்றும் தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது.
அதே நேரத்தில் எடப்பாடி தரப்பும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவிற்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனு அளித்தது. மேலும் ஆளுநரை சந்தித்து 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவ்வாறு இரண்டு அணியினரும் மாறி, மாறி சபாநாயகரிடம் முறையிட்டனர். இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெகவின் அமைச்சரவை கடந்த 21ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் அதிமுக எஸ்.பி.வேலுமணியின் அணிக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு நாள் முன்னதாக தங்களுக்கு அமைச்சருக்கான பட்டியலில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற விவரம் வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தரப்பு முதல்வர் விஜய்க்கு போன் போட்டது.
ஆனால், அவர் அந்த போனை எடுக்கவில்லை. 2 நாட்களாக எஸ்.பி.வேலுமணி தரப்பு போனை விஜய் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த தவெக நிர்வாகிகளுக்கு போன் போட்டும் எந்த பலனும் இல்லை. அவர்களும் போனை எடுக்கவில்லை. அதே நேரத்தில் ஆதரவு அளித்த கட்சிகளுக்கு அமைச்சர் பதவியை விஜய் வழங்கினார். ஆதரவு அளித்த கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் தொடர்ந்து நமக்கு அவர்கள் ஆதரவு அளிப்பார் என்று இந்த முடிவை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது.
இனிமேலும் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை இல்லை என்ற முடிவுக்கு விஜய் வந்தார். அதனால், தான் தவெக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு எப்போது அமைச்சர் தருவோம் என்று பேட்டியின் போது தெரிவித்தனர். அப்போது தான் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி அணிக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக விஜய்யை நம்பி இப்படி ஏமாற்றப்பட்டதை அறிந்து கவலையடைந்தனர்.
இந்த நிலையில் தான் எடப்பாடி குறித்து ஆவேசமாக பேசி வந்த எஸ்.பி.வேலுமணி அணி திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டி அளித்தது. அதில் எஸ்.பி.வேலுமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தான். எடப்பாடியுடன் எந்த மோதலும் இல்லை. எங்களுக்குள் இருப்பது கருத்து வேறுபாடு தான் என்று திடீரென பல்டி அடித்தார். எடப்பாடிக்கு எதிராக சபாநாயகரிடம் போர்க்கொடி தூக்கியவர். எங்களை தான் அதிமுகவாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எஸ்.பி.வேலுமணி எடப்பாடியுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று திடீரென அறிவித்தார்.
இதை எடப்பாடியும் ஏற்றுக்கொண்டார். பிரிந்து சென்றவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம். பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தக்கூடாது. பொதுச்செயலாளருக்கு எதிராக கலகம் செய்வதை கைவிட வேண்டும். பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதே மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கப்படும். ஒரு சிலருக்கு மட்டும் மீண்டும் பதவி வழங்கப்படாது என்று எடப்பாடி கூறினார். மேலும் தேவை ஏற்படும்போது மட்டுமே பொதுக்குழு கூட்டப்படும். தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்படும். கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதை எஸ்.பி.வேலுமணி தரப்பும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இடையே சென்னையில் இன்று சமாதான பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக எடப்பாடியும் வேலுமணியும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இரு அணிகளும் இணைய உள்ளது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* தவெக அமைச்சரவை கடந்த 21ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் எஸ்.பி.வேலுமணி அணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
* வேலுமணி தரப்பு முதல்வர் விஜய்க்கு போன் போட்டது. ஆனால், அவர் அந்த போனை எடுக்கவில்லை. 2 நாட்களாக போனை விஜய் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
* பேச்சுவார்த்தைக்கு வந்த தவெக நிர்வாகிகளுக்கு போன் போட்டும் எந்த பலனும் இல்லை. அவர்களும் போனை எடுக்கவில்லை.
* இதற்கிடையில், ‘வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு எப்போது அமைச்சர் பதவி தருவோம் என்று சொன்னோம்’ என தவெக அமைச்சர்கள் பேட்டியளிக்க தொடங்கினர்.
* அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது வேலுமணி அணிக்கு தெரியவந்தது.
