சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் இறுதியாக நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 4.630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோன்று, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கி கடந்த 6ம் தேதி வரை நடந்தது.
4 நாட்கள் விடுமுறையான நிலையில் 4 நாட்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளாகும். முதல் நாளான மார்ச் 30ம் தேதி 573 வேட்புமனுக்களும், 2ம் நாளான கடந்த 2ம் தேதி 1,361 வேட்புமனுக்களும், 3ம் நாளான 4ம் தேதி 3,430 வேட்புமனுக்களும், கடைசி நாளான 6ம்தேதி 7,599 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வேட்புமனுக்களையும் கடந்த 7ம் தேதி அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
7,599 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட 5,024 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், எடப்பாடி தொகுதியில் தவெக கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 2,467 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 108 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கடந்த 8 மற்றும் 9ம் தேதி காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து நேற்று மாலை இறுதி வேட்பாளர்களின் பட்டியலை அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட மனு தாக்கல் செய்த 7,599 பேரில் 2,460 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 509 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இறுதியாக தமிழகம் முழுவதும் 4,630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோன்று, சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே சின்னம் ேகட்டு முறையிட்டால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம், பெயர் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (பேலட் பேப்பர்) அச்சிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு தொகுதியில் 16 பேருக்கு மேல் போட்டியிட்டால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.
அதன்படி கூடுதலாக ஒவ்வொரு 16 வேட்பாளருக்கும் கூடுதல் இயந்திரம் பயன்படுத்தப்படும். இறுதியில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) இடம் பெற்றிருக்கும். தமிழகத்தில் தற்போதைய நிலையில், அதிக தொகுதிகளில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 பேர் களத்தில் உள்ளனர். அங்கு 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பரிசீலனையின்போது 83 மனுக்கள் ஏற்கப்பட்டது.
நேற்று 4 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதை தொடர்ந்து 83 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். இதனால், கரூர் தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று, குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். அங்கு ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட இல்லை. உதகை மற்றும் கூடலூரில் ஒரு சுயேச்சை உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் ேபாட்டியிடுகிறார்கள். இதையடுத்து முழு விவரம் இன்று தெரியவரும்.
