பெங்களூரு: பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ராணுவத் தாக்குதல், நம் நாட்டின் முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வலிமையின் சின்னம் என்று ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
பெங்களூருவில் நடந்த பல்முனை செயல்பாட்டின் தரைப்படை காட்சிப்படுத்தல் குறித்த ‘ரன் சம்வாத்’ கருத்தரங்கில் பேசிய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, நமது ராணுவ பலத்தை வெளிப்படுத்தி முப்படைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு உத்தி ஆகும். நாம் மேலும் ஒருங்கிணைப்பை அடைய வேண்டும். ஆயுத படைகளின் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்துக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம். ஆபரேஷன் சிந்தூர் ஒரு படையின் வெற்றி மட்டுமல்ல.
ராணுவமும் விமானப்படையும், உளவுத்துறை, இணைய நெட்வொர்க்குகள் மற்றும் மின்னணு போர் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இணைந்து பாகிஸ்தானில் உள்ள இலக்குகள் தாக்கப்பட்டன. அதேவேளையில், கடற்படையின் மூலோபாய நகர்வும் இதற்கு ஆதரவளித்தது. நவீன கால போர்கள் புவியியல் எல்லைகளுக்குள் அடங்குவதில்லை. தரை, வான், கடல், இணையம், விண்வெளி, அறிவாற்றல் திறன்கள் ஆகிய 6 களங்களும் ஒரே நேரத்தில் செயல்பட்டு, ஒன்றுக்கொன்று துணைபுரிய வேண்டும் என்பதே இன்றைய தேவை. இன்றைய போர்க்கள த்தில் இந்திய ராணுவம் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒருமைப்பாட்டை நோக்கியும் நகர வேண்டும்’ என்றார்.
