×

காங். ஆட்சிக்கு வந்தால் ஆயுத காவல் படையில் பாகுபாடு அகற்றப்படும்: ராகுல்காந்தி உறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆயுத காவல் படை வீரர்களுக்கு தலைமைத்துவ வாய்ப்புக்களை மறுக்கும் பாகுபாடு அகற்றப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் காவல் படையின் வீர தினத்தையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ஆயுதக் காவல் படையின் வீர தினமான இன்று நமது படையின் துணிச்சலான மற்றும் வீரமிக்க வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், மரியாதைக்குரிய அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது துணிச்சலும், தியாகமும் ஒவ்வொரு நாளும் நமது தேசத்தை பாதுகாக்கின்றன.

நமது எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டு நீங்கள் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றீர்கள். தீவிரவாதம் மற்றும் நக்சலிம் சார்ந்த அச்சுறுத்தல்களை நீங்கள் எதிர்கொள்கின்றீர்கள். ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான நமது தேர்தல்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை நீங்கள் செய்கின்றீர்கள். எனினும் ஒரு உண்மையான அஞ்சலி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் அமைவதல்ல. பல ஆண்டு கால தியகாம், கடினமான கடமை மற்றும் சேவை ஆகியவற்றை செய்தபோதிலும் ஆயுதக் காவல் படை வீரர்களுக்கு சரியான நேரத்தில் பதவி உயர்வுகளோ அல்லது தங்கள் சொந்தப் படையை தலைமை தாங்கி வழிநடத்தும் உரிமையோ கிடைப்பதில்லை.

ஏனெனில் உயர்மட்ட தலைமை பொறுப்புகள் அந்த அமைப்புக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆயுதக் காவல் படை வீரர்களிடம் சிறப்புப் பயிற்சியும், விலைமதிப்பற்ற கள அளவிலான அனுபவமும், ஆழ்ந்த வியூக ரீதியான நுண்ணறிவும் நிறைந்துள்ளன. எனவே தேசிய பாதுகாப்பின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்தப் படைகளை அதே அமைப்புக்குள்ளிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வழிநடத்துவது மிக அவசியமாகும். அத்தகையவர்களால் தான் வீரர்களின் தனித்துவமான சவால்கள் , தேவைகளை புரிந்து கொள்ள முடியும்.

காங்கிரஸ் கட்சியும் நானும் ஆயுதக் காவல் படையின் வீரர்களை மிகுந்த மதிப்போடு பார்க்கிறோம். தங்களது சொந்த படைக்குள்ளேயே பதவி உயர்வு பெறுவதும், உயர்மட்ட தலைமை பொறுப்புகளை அடைவதும் உரிய மரியாதை பெறுவதும் அவர்களின் நியாயமான உரிமைகள் என்று உறுதியாக நம்புகிறோம். நாங்கள் ஆட்சி அமைத்ததும் இந்த பாகுபாடு நிறைந்த அமைப்பு முற்றிலுமாக அகற்றிவிட்டு மத்திய ஆயுதக் காவல்படை வீரர்களுக்கு அவர்களின் முழுமையான உரிமைகளும் சலுகைகளும் கிடைப்பதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Congress ,Armed Police Force ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Opposition Leader ,Central Reserve Police Force ,Valor Day ,Rahul Gandhi… ,
× RELATED பாபர் மசூதி கட்டும் சர்ச்சையில்...