புதுச்சேரி: புதுச்சேரி, கேரளா, அசாமில் நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. அனைத்து இடங்களிலும் பரவலாக மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால், புதுச்சேரியில் 91%, கேரளாவில் 79%, அசாமில் 85% வாக்குகள் பதிவாகின. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, 3 மாநிலங்களிலும் நேற்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. புதுவை, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 30 சட்டப்பேரவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு 181 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் என அனைத்து தரப்பினரும் அடையாள அட்டையுடன் காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணி நிலவரப்படி 17.43 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 37.06 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 56.83 சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 72.40 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.
நிறைவாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு மொத்தமாக 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்போடு லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தாகூர் கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்களில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ட்ராங் ரூமுக்கு சீல் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி சிசிடிவி கேமிராவும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், காரைக்காலில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்திலும், ஏனாமில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜவகர்லால் நேரு அரசு உயர்நிலைப்பள்ளியிலும் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
சிறப்பு தீவிர திருத்த பணிக்கு நடைபெற்ற இத்தேர்தலில் வரலாறு காணாத வகையில் 89.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தபால் வாக்குகள் 1.36 சதவீதம் பதிவானது. கடந்த 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 86.24 சதவீதம் வாக்குகள் பதிவானது இதுவரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 83.42 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதை விட தற்போது 6.5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
கேரளா: 140 தொகுதிகள் கொண்ட கேரளத்தில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 883 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர் போட்டியிடும் தர்மடம் தொகுதிக்குட்பட்ட பினராயி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார். வாக்களித்த பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2021 தேர்தலை விட இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும்’’ என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் அவர் போட்டியிடும் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் தொகுதியிலுள்ள பள்ளியில் வாக்களித்தார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் தன்னுடைய மனைவியுடன் திருவனந்தபுரம் கவடியார் பகுதியில் உள்ள பள்ளியில் ஓட்டு போட்டார். நேரம் தொகுதி பாஜ வேட்பாளரும், மாநில தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் ஜவகர் நகரில் உள்ள பள்ளியிலும், சசிதரூர், எம்பி திருவனந்தபுரம் வழுதக்காடு காட்டன்ஹில் அரசுப் பள்ளியிலும், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், நடிகருமான ரமேஷ் பிஷாரடி கொச்சி திருப்பூணித்துறாவிலும் ஓட்டு போட்டனர்.
மதியம் வரை அடித்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். திருவனந்தபுரம் உள்பட சில பகுதிகளில் மாலையில் திடீர் மழையும் பெய்தது. ஆனாலும் வாக்காளர்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். இறுதிக்கட்ட நிலவரத்தின்படி கேரளத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவாயின. கடந்த தேர்தலில் 75.76 சதவீத வாக்குகள் பதிவானது. கேரளாவில் எஸ்ஐஆருக்குப் பின் நடந்த இந்த தேர்தலில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அசாம்:வடகிழக்கு மாநிலமான அசாமில் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடந்தது. அங்கு, 3வது முறையாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான பாஜவின் என்டிஏ கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் நிலையில், 2016ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் எதிர்த்து நிற்கிறது. மொத்தம் 722 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 35 மாவட்டங்ளில் 31,490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலையில் கவுகாத்தி உள்பட பல பகுதிகளில் லேசான மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஜலுக்பாரி தொகுதியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது மனைவி ரிங்கி புயான் சர்மா மற்றும் 2 பிள்ளைகளுடன் வந்து வாக்களித்தனர். முன்னதாக அவர்கள் காமாக்யா மற்றும் தியோல் கோபிந்தா கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். வாக்களித்த பின் பேட்டி அளித்த முதல்வர் ஹிமந்தா, ‘‘பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியை அசாம் மக்கள் மீண்டும் வெற்றி பெறச் செய்வார்கள்’’ என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவருமான கவுரவ் கோகாய் தனது தாயார் டோலி கோகாயுடன் ஜோர்ஹட் தொகுதியில் வாக்களித்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘இன்று அசாமுக்கு முக்கியான நாள். அசாமின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மக்கள் அதிகளவில் வந்து வாக்களித்து முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இந்த தேர்தலுக்குப் பிறகு சக்திவாய்ந்த, அச்சமில்லாத, புதிய அசாம் உதயமாகப் போகிறது’’ என்றார்.
சமீபத்தில் மர்மான முறையில் இறந்த பிரபல அசாம் பாடாகர் ஜுபின் கார்க்கின் மனைவி கரிமா சைகியா கார்க், சகோதரி பால்மி போர்தாகூர் ஆகியோர் திஸ்பூர் தொகுதியில் வாக்களித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரியான் பராக் கவுகாத்தியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 85.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு 95 சதவீதமாக இருந்தது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜ, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் 30 பேர் காயமடைந்துள்ளனர். 7 பேர் கைதாகி உள்ளனர். 3 மாநிலத்திலும் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
* வி.வி.பேட் இயந்திரத்தில் புகை
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோத்துகுளம் அரசு பள்ளியில் 27/14 வாக்கு சாவடியில் காலை 9 மணியளவில் வி.வி.பேட் இயந்திரத்தில் உள்ள பேட்டரியில் திடீரென்று புகை வந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வாக்குசாவடி மையத்திலிருந்து அந்த இயந்திரத்தை தேர்தல் அலுவலர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து வி.வி.பேட் இயந்திரத்தில் இருந்த பேட்டரியை அப்புறப்படுத்தினர். மாவட்ட தேர்தல் அலுவலர் பூஜா வந்து தேர்தல் அலுவலர்களிடம் இதுபற்றி கேட்டறிந்தார். பெல் நிறுவன பொறியாளர்கள், வி.பி.பேட் இயந்திரத்தில் மாற்று பேட்டரியை மாற்றியதும் மீண்டும் 9.10 மணியளவில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.
* அதிகபட்ச வாக்குப்பதிவு எஸ்ஐஆர் காரணமா?
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 85.2 சதவீதமும், கேரளம் சட்டப்பேரவை தேர்தலில் 77.7 சதவீதமும், புதுச்சேரியில் 89.5 சதவீதமும் பதிவாகி இருப்பதாக இரவு 7 மணி அளவில் தலைமை தேர்தல் கமிஷன் தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அசாமில் 82.42 சதவீதமும், கேரளத்தில் 76 சதவீதமும், புதுச்சேரியில் 83.42 சதவீதமும் பதிவாகி இருந்தது. தற்போது அமோக வாக்குப்பதிவுக்கு எஸ்ஐஆர் பணியும் ஒரு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
* காங். பூத் ஏஜென்ட் கைது
காசர்கோடு மாவட்டம் உதுமா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நீலகண்டன் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்குட்பட்ட பேக்கல் பகுதியில் உள்ள ஒரு பூத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் தலைமை ஏஜெண்டாக வக்கீல் ஜமால் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடி அணிந்து பூத்தில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜமாலை போலீசார் கைது செய்து கண்ணாடியை கைப்பற்றினர்.
* கேரளத்தில் நடிகர்கள் வாக்குப்பதிவு
கேரளத்தில் மம்மூட்டி கொச்சி பள்ளுருத்தியிலும், பிரித்விராஜ் கொச்சி தேவராவிலும், பகத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் ஆலப்புழாவிலும், ஆசிப் அலி தொடுபுழாவிலும், டொவினோ தாமஸ் கொச்சியிலும் ஓட்டு போட்டனர். நடிகர் மோகன்லால் திருவனந்தபுரத்தில் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
இதேபோல நடிகைகள் மமிதா பைஜு, அபர்ணா முரளி, அஹானா கிருஷ்ணா ஆகியோரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். நடிகரும், ஒன்றிய இணையமைச்சருமான சுரேஷ் கோபி திருச்சூர் மாவட்டம் குருவாயூரிலும், நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கொல்லத்திலும், நடிகரும், அமைச்சருமான கணேஷ்குமார் பத்தனாபுரத்திலும் ஓட்டு போட்டனர்.
* வாக்குச்சாவடியில் செல்போனில் வீடியோ எடுத்தவர் மீது வழக்குபதிவு
வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் கொடுத்து விட்டு வாக்களிக்க செல்ல வேண்டும். இந்நிலையில், அசாமில் திபு தொகுதியில் உள்ள ஒரு வாக்குமையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் நேற்று பரவியது. இது குறித்து கர்பி அங்க்லாக் மாவட்ட நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனில் வீடியோ எடுத்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
* வரலாற்றிலேயே அதிகம்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் 1954ம் ஆண்டு நவ.1ம் தேதி விடுதலை அடைந்தது. 1959ம் ஆண்டு முதன் முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், புதுச்சேரி சட்டப்பூர்வமாக 1963ம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டு 1964ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 16வது சட்டபேரவைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 91.23% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2011ம் ஆண்டு 85.57% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதேபோல், குறைந்தபட்சமாக 1991ம் ஆண்டு 67.66% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
