×

2026-27ம் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட் படிப்புகள் ரத்து: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்புகள் வரும் 2026-27ம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்புகள் வரும் 2026-27ம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிடிஇ), கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட பொது அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் விதிமுறை திருத்தங்களின்படி, இனிவரும் காலங்களில் இத்தகைய ஒருங்கிணைந்த 4 ஆண்டு படிப்புகளை நடத்த எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அனுமதி கிடையாது. இந்த பட்ட படிப்புகளை நடத்தும் எந்தவொரு கல்வி நிறுவனங்களும் 2026-27ம் கல்வியாண்டிலிருந்து புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்ட படிப்புகளில் 2026-27ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை.

இந்த அறிவிப்பினை மீறி, விதிகளுக்கு புறம்பாக ஏதேனும் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தினால், அதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கை மற்றும் ஆசிரியர் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஏற்கனவே இந்த படிப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இதில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Tags : Tamil Nadu Teacher Education University ,Chennai ,Pedagogical Colleges ,Tamil Nadu. ,SC ,P. ,P. Tamil Nadu University of Teacher Education ,
× RELATED கொடைக்கானலில் மழை இல்லாததால்...