×

கொடைக்கானலில் மழை இல்லாததால் குடிநீர் தேக்கத்தில் குறையும் நீர்மட்டம்: வீடுகளுக்கு சீரான விநியோகத்தில் சிக்கல்

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் போதிய மழை இல்லாததால் குடிநீர் தேக்கப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், வீடுகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். கோடை சீசன் காலங்களில் கூட்டம் களைகட்டும். கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள புதிய குடிநீர் தேக்க பகுதி மற்றும் கீழ்க்குண்டாறு பகுதி குடிநீர் தேக்கத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதமாக போதிய மழை இல்லாததால் குடிநீர் தேக்கப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 2 மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கீழ்க்குண்டாறு குடிநீர் தேக்கத்தில் இருந்து கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தற்போது குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மின்மோட்டார் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வருகிறது.

இதனால், குடிநீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே, சீரான குடிநீர் விநியோகத்திற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘குண்டாறு குடிநீர் விநியோகிக்கும் பகுதியில் புதிய மின்மோட்டார் பொருத்தப்பட்டவுடன் நகர்பகுதியில் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

Tags : Godaikanal ,Kodiakanal ,Kodaikanal ,Dindigul district ,Princess of the Hills ,
× RELATED ஆலங்குளம் அருகே பனை தொழிலாளியை...