×

ஆலங்குளம் அருகே பனை தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ, 2 போலீசார் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளில் வழக்கு: கைது செய்யக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம்

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே பனை தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ மற்றும் 3 போலீசார் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் எஸ்ஐயை கைது செய்யக்கோரி பொதுமக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன்(36). இவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் பனைமரங்களில் ‘கள்’ இறக்கி விற்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்ஐ இசக்கிராஜா 2 போலீசாருடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு மணிகண்டன் இல்லாததால், அவரது வீட்டிற்கு எஸ்ஐ, போலீசார் சென்றனர். அங்கிருந்து மணிகண்டனை அவரது தோட்டத்திற்கு அழைத்து வந்து பனைமரத்தில் கட்டியிருந்த ‘கள்’ பானையை இறக்குமாறு எஸ்ஐ கூறியுள்ளார். இதையறிந்த மணிகண்டனின் அண்ணன் சிவன்பொன்ராஜ், அவரது 17 வயது மகள், 10ம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோர் தோட்டத்திற்கு வந்து எஸ்ஐயிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது தனது குடும்பத்தினருக்காக பேசிய மணிகண்டனுக்கும், எஸ்ஐ இசக்கிராஜாவும் வாக்குவாதம் முற்றி கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அப்போது மணிகண்டன், எஸ்ஐ தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை நோக்கி 4 ரவுண்டு சுட்டதில் 2 தோட்டாக்கள் அவரது காலில் பாய்ந்தது. இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மணிகண்டனின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆலங்குளம் – முக்கூடல் சாலையில் திரண்டு வந்து காமராஜர் சிலை முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மணிகண்டன் அண்ணன் மகள் அளித்த புகாரின்பேரில், எஸ்ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார் மீது பிஎன்எஸ் சட்டம் கொலை முயற்சி 109 (1), 296 (பி), 351 (3) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களை கைது செய்யக்கோரி நேற்று காலை முதல் மாலை வரை மருதம்புத்தூர் கிராமமக்கள் மற்றும் மணிகண்டனின் உறவினர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தேரடி மாடன் கோயில் வளாகத்தில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமபகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

Tags : SI ,Alankulam ,
× RELATED படிக்கும் வயதில் படிப்பில் மட்டும்...